துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், அருண் விஜய், ஆரவ், சஞ்சய் தத் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மே மாதம் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதன் சூட்டிங் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. இதற்கு அஜித்தான் முக்கிய காரணம் என்றும், அவர் பைக் டூர் சென்றதாலேயே அனைத்து பணிகளும் தாமதமானதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி பட சூட்டிங் நடைபெற்றது.
கிரைம் திரில்லர் பாணியில் இந்த திரைப்படம் உருவாகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு துபாயிலும், சென்னையிலும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைகிறாராம். திரிஷா இல்லனா நயன்தாரா எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதிக். முதல் திரைப்படத்தையே முகம் சுளிக்கும் வகையில் டபுள் மீனிங் அர்த்தத்துடன் அவர் எடுத்திருந்தார்.
விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், இளைஞர்கள் அதனை கொண்டாடியதால் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பிறகு சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை எடுத்தார் ஆதிக் ரவிச்சந்திரன். படு தோல்வியை சந்தித்த அந்த திரைப்படம், இயக்குனருக்கும் பெருத்த அடியை கொடுத்தது.
இதனால் சில காலம் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், அஜித் – எச் வினோத் இயக்கத்தில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். இதன் பிறகு பகிரா படத்தை எடுத்து தோல்வி அடைந்த அவர், விஷால் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கினார். எதிர்பார்த்ததை விட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்குக் காரணம் அஜித்குமார் என்றும், அவர் கூறியதனால் தான் பெரிய படத்தை தான் இயக்கியதாகவும் ஆதி தெரிவித்தார்.
மேலும் எங்கு சென்றாலும் தன்னை அஜித் ரசிகர் என்று அவர் காட்டிக் கொண்டார். இப்படியான சூழலில்தான் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட அஜித்தின் அடுத்த படத்தை அவர் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் எடுக்கிறதாம். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்க உள்ளாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





