தமிழ் சினிமா கவிஞர்களில் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பத்திற்குரிய கவிஞராக திகழ்ந்தவர் நா.முத்துக்குமார். இவர் எழுதிய பாடல் வரிகள் பலவும் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றாக இருக்கும். நா.முத்துக்குமார் தமிழ் சினிமாவின் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜா-நா.முத்துக்குமார் காம்போ எப்போதும் நிலைத்திருப்பவை.

நா.முத்துக்குமார் முதன்முதலில் பாடல் எழுதிய திரைப்படம் சீமான் இயக்கிய “வீரநடை”. இத்திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்பட பாடல்களை எழுதி தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக உயர்ந்த நா.முத்துக்குமார், கடைசியாக பாடல்கள் எழுதிய திரைப்படம் “சர்வம் தாள மயம்”. தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நா.முத்துக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை காரணமாக உயிரிழந்தார். தமிழ் இசையுலகிறகு மிகப்பெரிய இழப்பு என்றே இதனை கூறவேண்டும்.
பொதுவாக கவிஞர்கள் என்றாலே அவர்களுக்கு மதுப்பழக்கம் இருக்கும் என்று மக்களிடம் ஒரு பொதுப்புத்தி இருக்கிறது. நா.முத்துக்குமார் இறப்பிற்கு அவரது மதுப்பழக்கம்தான் காரணம் என்று பலரும் கூறுவது உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, நா.முத்துக்குமாரின் இறப்பு குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

‘கவிஞர்கள் என்றவுடன் ஏன் மதுப்பழக்கத்துடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் நா.முத்துக்குமார் இறப்பிற்கு காரணம் தன்னுடைய உடலை கவனிக்காமல் விட்டதுதான். ஓய்வே இல்லாமல் பாடல்கள் எழுதியதுதான் காரணம். உடல் அலைச்சலை விட மூளை அலைச்சல்தான் மிக பயங்கரமான ஒன்று.
உடல் உழைப்பை விட மூளை உழைப்பிற்குத்தான் அதிக ஓய்வு கொடுக்கவேண்டும். நா.முத்துக்குமார் தொடர்ச்சியாக உறக்கம் இல்லாமல் இரவு பகலாக பாடல்கள் எழுதியதுதான் அவரது இறப்பிற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.





