நடிகை நமீதா, தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக 1990களில் வலம் வந்தவர். மிகவும் உயரமான நடிகையாக இருந்த நமீதாவுக்கு சத்யராஜ், சரத்குமார், ஜீவன், சுந்தர் சி போன்ற உயரமான நடிகர்களே ஜோடியாக நடிக்க முடிந்தது. அதனால் அவரால் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது.
நமீதா முதல்முறையாக எங்கள் அண்ணா என்ற படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சரத்குமாருடன் ஏய், சாணக்யா படங்களிலும், பிறகு இங்கிலீஷ்காரன், புலி முருகன், பம்பரக் கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்சை குதிர, ஆணை, தகப்பன் சாமி, நீ வேணுண்டா செல்லம், நான் அவன் இல்லை, வியாபாரி, அழகிய தமிழ் மகன், பில்லா, சண்ட, பாண்டி, பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
நமீதாவுக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், அவர் தெலுங்கு பக்கம் சென்று தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். அங்கும் ஒரு கட்டத்தில் சினிமாவில் போதிய வாய்ப்பு இன்றி சினிமாவை விட்டே ஒதுங்கினார். பிறகு டிவி சேனல்களில் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கேற்றார்.
இதையடுத்து அரசியல் கட்சிகளில் ஈடுபாடு காட்டிய நமீதா இப்போது பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நமீதாவை பொருத்தவரை நல்ல நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். குறிப்பாக கவர்ச்சி நடிப்பில் பலரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் பலத்த மழை ஏற்பட்டபோது நமீதா வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அவர் படகுமூலம் தன் இரட்டைக் குழந்தைகளுடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது 43வது பிறந்தநாளை, நேற்று கொண்டாடிய நடிகை நமீதா சென்னை தி நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார். அதன்பிறகு, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு சென்ற நமீதா, கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, என் பிறந்தநாளை ஒட்டி கோவிலில் அன்னதானம் செய்தேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கேப்டன் விஜயகாந்த் மறைந்த சமயத்தில் என்னால் இங்கு வர முடியவில்லை. இன்று என் பிறந்தநாள் என்பதால் கேப்டனின் ஆசிர்வாதம் வேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன். நான் கடவுளாக கருதும் அவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவது, என்னுடைய பாக்கியம். தமிழ்நாட்டில் நமீதாவுக்கு உயிர் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் தான். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்தது மகிழ்ச்சி என்று நமீதா கூறினார்.





