தமிழ் சினிமா நடிகர்களை பொறுத்தவரை நாசர் ஒரு தனித்துவமான நடிகராக திகழ்ந்து வருபவர். வில்லன், காமெடியன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என பன்முக நடிகராக திகழ்ந்து வரும் நாசர் ஒரு மிகச் சிறந்த இயக்குனரும் கூட.
இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் கலைநயமான திரைப்படங்களாகும். அதாவது கமர்சியல் திரைப்படங்களில் இருந்து சற்று விலகி உலக சினிமா போன்ற உருவாக்கத்தை கொண்ட திரைப்படங்கள் ஆகும். ஆதலால் இவர் இயக்கிய திரைப்படங்கள் கமர்சியலாக தோல்வியடைவது உண்டு என்றாலும் விமர்சன ரீதியாகவும் யதார்த்த சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவை.
அந்த வகையில் “அவதாரம்”, “தேவதை”, “மாயன்”, “பாப் கார்ன்”, “சன் சன் தாத்தா” ஆகிய திரைப்படங்களை நாசர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் நாசர் ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நிஜமாகவே உயிரை கொடுத்து நடித்தது குறித்த ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல வசன கர்த்தாவான பிருந்தா சாரதி பகிர்ந்துகொண்டுள்ளார்.
நாசர் இயக்கி நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவதாரம்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் நாசரை போலீஸார் ஒருவர் அடிக்க, நாசரோ தரையில் வழுக்கிப்போய் சுவற்றில் மோதி நிற்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட வேண்டியது இருந்ததாம்.
இந்த காட்சிக்காக தரை முழுவதும் எண்ணெய்யை ஊற்றி வைத்திருந்தார்களாம். அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நாசர், வழுக்கி போய் சுவற்றில் அடித்து விழுந்து கிடந்தாராம். நாசர் இவ்வாறு ரிஸ்க் எடுத்து நடித்ததை பார்த்த படக்குழுவினர் அவரை பாராட்டும் வகையில் கைத்தட்டியிருக்கிறார்கள்.
ஆனால் நாசரோ எழுந்திருக்கவே இல்லையாம். அதாவது சுவற்றில் போய் இடித்ததில் நாசரின் முதுகெழும்பில் அடிபட்டுவிட்டதாம். அதன் பின் சில மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகுதான் நடிக்கவே வந்தாராம்.





