தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஹரி இயக்கியா ஐயா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால்தடம் பதித்த அவர், அறிமுகமான குறுகிய காலத்திலேயே சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாகி பரபரப்பாக பேசப்பட்டார்.
தொடர்ந்து கஜினி, கள்வனின் காதலி, தலைமகன் திரைப்படங்களில் வந்து போன நயன்தாரா, வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென சிம்புவுடனான உறவை நடிகை துண்டித்தார். இந்த நிலையில், பில்லா திரைப்படம் நயனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
நீச்சல் உடையில் வந்து கவர்ச்சிக்கு தாராளம் காட்டிய அவர், தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன், வில்லு, ஏகன் என ஏராளமான திரைப்படங்களில் நயன்தாராவை பார்க்க முடிந்தது.
நானும் ரவுடிதான் படத்தில் காதம்பரியாக நடித்து பட்டையை கிளப்பிய நயன்தாரா, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளது. பெரிய நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன், அவ்வபோது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து வருகிறார்.
இதில் கோலமாவு கோகிலா, மாயா, அறம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இப்படி கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாரா, அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார். பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்ட உள்ளது.
நயன்தாராவின் முதல் இந்தி திரைப்படம், வசூலில் புதிய சாதனையை படைக்க இருந்தாலும் இயக்குனர் அட்லி மீது அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். ஜவானில் அவர் நடித்த பல காட்சிகளை அட்லி நீக்கியதும், சில நிமிடங்களே தீபிகா படுகோனே வந்தாலும் அவருக்கு தன்னை விட அதிக முக்கியத்துவம் கொடுத்ததும்தான் நயனின் கோபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனாலேயே ஜவான் படத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லையாம். இதனை அறிந்த ரசிகர்கள், அட்லிக்கு இது தேவைதான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.





