சமீபகாலமாக நடிகர், நடிகைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஏதேனும் வில்லங்கமான விஷயங்களை சொல்லி விவகாரங்களில் மாட்டிக் கொள்கின்றனர். இது வைரலாகி, சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து விடுகிறது.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அவ்வப்போது உடல்நல குறிப்புகள், ஆரோக்கியம் குறித்து சில பதிவுகளை அவ்வப்போது செய்வார். சமீபத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு குறித்து ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். டாக்டர் ஒருவர் அதை பயன்படுத்துவது தவறு என எதிர்ப்பு கிளப்பி, விவகாரம் விஸ்வரூபமானது.
தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி பூவினால் தயாரிக்கப்பட்ட தேநீர் குடிப்பதால் நிறைய உடல் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது செம்பருத்தி தேநீர் குடிப்பதால் டயாபட்டீஸ், அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறு போன்ற உடல்நல பாதிப்புகைள சரிசெய்ய உதவும் என்று அந்த அந்த பதில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு டிவிட்டர் ஒன்றில், டாக்டர் ஒருவர் நயன்தாராவின் பதிவுக்கு இது நிரூபிக்கப்படாத ஒன்று என்று பதிவிட்டு இருந்தார்.
இதனால் இந்த செம்பருத்தி தேநீர் விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நடிகை சமந்தா, நடிகை நயன்தாரா போன்றவர்கள் இதுபோன்ற தெரியாத விஷயங்களை பேசாமல் இருப்பதே நல்லது என்றும் சிலர் அட்வைஸ் செய்து பதிவிட்டு இருந்தனர்.
இதனால் பயங்கர அப்செட் ஆன நடிகை நயன்தாரா, அந்த டாக்டருக்கு பதிலடி தரும் விதமான ஒரு பதிவை செய்துள்ளார். அதில் முட்டாள்களிடம் விவாதம் செய்யாதே, உங்களை அவர்கள் மட்டமான நிலைக்கு இழுத்துச் சென்று, அவர்களின் அனுபவத்தால் தோற்கடித்து விடுவார்கள், என்று கோபமாக கூறியிருக்கிறார். மேலும், செம்பருத்தி தேநீர் எப்படி தயார் செய்வது என்ற பதிவையும் அதில் நயன்தாரா போட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





