கேரளாவில் லோக்கல் டிவி சேனல் ஒன்றில் காம்பியராக இருந்தவர் நயன்தாரா. மலையாள சினிமாவில் மானசிகாரே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். பிறகு தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நயன்தாரா அறிமுகமானார்.
அவரது இளமையும் அழகும் நடிப்பு திறமையும் கவர்ச்சியும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அவருக்கு பெற்றுத் தந்தது. ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா தனுஷ் சிம்பு விஷால் சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர் முன்னணி நடிகையாக மாறி தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார்.
அதே நேரத்தில் கதாநாயகியை மையப்படுத்திய படங்களிலும் அவர் நடிக்க ஆரம்பித்தார். அறம் மாயா நெற்றிக்கண் இமைக்கா நொடிகள் ஓ 2 என நயன்தாராவை மையப்படுத்திய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அதன்பிறகு அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். ஒரு படத்தில் நடிக்க 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமும் வாங்கினார்.
ஆனால் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்த பிறகு அவரது மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்தது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மேலும் அவர் நடித்த சில படங்களும் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால் இப்போது நயன்தாரா அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.
வழக்கமாக படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட அட்ராசிட்டி செய்த நயன்தாரா, இப்போது வழக்கத்துக்கு மாறாக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங்குக்கு சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார். இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கூட கேரவனுக்குள் செல்வதில்லை. டைரக்டர் சுந்தர் சி பேக்கப் சொல்லாத வரை செட்டுக்குள் அமைதியாக இருந்து விடுகிறார். அப்படி இருந்த நயன்தாரா இப்படி மாறிட்டாரே என படக்குழுவினரே ஆச்சரியத்தில் உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் போட்டியாக பல இளம் நடிகைகள் களத்தில் இருக்கின்றனர். தவிர, கையில் உள்ள ஒரே படம் மூக்குத்தி அம்மன் 2 மட்டுமே. இதிலும் பிரச்னை செய்தால் சுந்தர் சி வேறு நடிகையை உடனே மாற்றி விடுவார். அவரை பொருத்த வரை கதை தான் முக்கியமே தவிர, கதாநாயகி அல்ல. தொடர்ந்து தோல்வி படங்களை தந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம்தான் பெரிய நம்பிக்கையாக உள்ளது. இந்த காரணங்களால் வழக்கமான நயன்தாராவை துரத்தி விட்டு, ஐயா பட நடிகையாக தன்னை நயன்தாரா மாற்றிக்கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாக உள்ளது.





