தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரமாக பல வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் இளைய தளபதி என்றும் மெர்சல் படத்தில் இருந்து தளபதி விஜய் அழைக்கப்பட்ட அவர் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் தமிழ்நாட்டு அரசியலில் அனல் பரப்பி வருகிறார்.
சினிமாவில் அவர் காட்டிய அதிரடியை போலவே அரசியல் களத்திலும் அவரது அதிரடி ஆட்டங்களால் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கதிகலங்கி போயிருக்கின்றன. நேற்று சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், ஆளுங்கட்சி திமுக காதில் விசில் ஊதி அனுப்புங்க. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அது உங்க பணம்தான் சந்தோஷமா வாங்கிக்குங்க என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் போர்டு சான்றிதழ் கிடைக்காததால் அந்த படம் திரைக்கு வராமல் தடைபட்டது. சென்சார் போர்டின் தாமதம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இதில் ஜனநாயகன் படத்துக்கு பாதகமாக தீர்ப்புகளே வெளியானதால் ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மேலும் படம் ரிலீஸ் ஆவதில் இன்னும் அடுத்தடுத்து சிக்கல் அதிகரித்தது. அதனால் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் இருந்து வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் ஜனநாயகன் படத்தை ரீவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளது.
சென்சார் போர்டின் ரீவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டால் சென்சார் சான்று உடனடியாக கிடைத்து விடும். படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்மாக அறிவிக்கப்படும். ஆனால் சென்சார் ரீவைசிங் கமிட்டி படத்தை பார்க்காமல் தொடர்ந்து தாமதித்து வருகிறது.
அதனால் ஜனநாயகன் படம் இன்னும் சில மாதங்களுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் தான் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு இடையில் 10ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வர உள்ளது. மேலும் எலக்சனும் வருவதால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஜூன் மாதம்தான் என்றும் உறுதியாக கூறப்படுகிறது.





