மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த படம் விடாமுயற்சி. கடந்த மாதம் 6ம் தேதி வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் வரை பலத்த நஷ்டத்தை தந்தது. 2 ஆண்டுகளுக்கு பின் வெளியான அஜீத்குமார் நடித்த இந்த படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்திலும் நடிகை திரிஷா அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சுனில் பிரபு பிரசன்னா அர்ஜூன்தாஸ் போன்ற முக்கிய நடிகர்களும் படத்தில் உள்ளனர்.
நடிகர் அஜீத்குமார் கடந்த ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். துபாய் போர்ச்சுக்கல் இத்தாலி பிரிட்டன் என வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸ் பந்தயங்களில் அவர் பங்கேற்று வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் வரை இந்த கார் ரேஸ் போட்டிகள் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடக்கின்றன.
இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் தனது அடுத்த பட ஷூட்டிங்கில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்க உள்ளார். கடந்த வாரத்தில் குட் பேட் அக்லி டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் 24 மணி நேரத்தில் டீசர் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை புரிந்துள்ளது.
அதனால் குட் பேட் அக்லி படம் சூப்பர் ஹிட் படமாக இருந்தால், தனது அடுத்த படம் இயக்கும் வாய்ப்பை மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே கொடுக்க நடிகர் அஜீத்குமார் முடிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில் நடிகர் தனுஷூம் நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்து கதை சொன்ன நிலையில், அந்த கதையும் அஜீத்குமாருக்கு மிகவும் பிடித்துப் போய் ஓகே சொல்லி இருக்கிறார்.
விஷால் எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. அப்போது மார்க் ஆண்டனி 2 படம் உருவாக ஏற்பாடுகள் நடந்த நிலையில், அஜீத்குமார் ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு மார்க் ஆண்டனி 2 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவாரா, அல்லது அஜீத்குமார் படத்தையே மீண்டும் இயக்குவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் தனது படத்தின் அடுத்த இயக்குனர் தனுஷா, ஆதிக் ரவிச்சந்திரனா என்பது அஜீத்குமார் எடுக்கும் இறுதி முடிவில்தான் உள்ளது.





