வாரந்தோறும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தமிழ் சினிமாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பண்டிகை கால படங்கள் தவிர்த்து, முன்னணி நடிகர்கள் படங்கள் தவிர்த்து இடையில் இதுபோல் நிறைய படங்கள் ரிலீஸாகி வருகின்றன. இந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகி அதில 9 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன.
அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த தி கோட் 455 கோடி ரூபாய் வசூலை கடந்திருந்தது. ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் 230 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் இதுவரை உலகளவில் ரூ. 310 கோடியை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 150 கோடி வசூலை தாண்டியிருக்கிறது.
இந்த ஆண்டில் வெளியான மற்ற படங்கள் கங்குவா, இந்தியன் 2, தங்கலான், மகாராஜா, ராயன், அரண்மனை 4 ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன. இதில் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியை கடந்தாலும் இந்தியன் 2, கங்குவா, தங்கலான் போன்ற படங்களுக்கு விமர்சன ரீதியாக மோசமான படங்கள் என்ற பெயரே கிடைத்தது.
இந்நிலையில் வருகிற 29ம் தேதி தமிழ் சினிமாவில் மொத்தம் 9 புதிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாள், டப்பாங்குத்து, மாயன், மிஸ் யூ, பரமன், சைலன்ட், சாதுவன், சொர்க்கவாசல், திரும்பிப்பார் என 9 படங்கள் வருகிற வெள்ளிக்கிழமையன்று, 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதில் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படம், நடிகர் சித்தார்த் நடித்த மிஸ் யூ ஆகிய 2 படங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்த, பரிச்சயமான ஹீரோக்கள் நடித்த படங்களாக இருக்கின்றன. இந்த 2 படங்கள் மட்டுமே அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த 2 படங்கள் குறித்து ஏற்கனவே பிரமோஷன் நடந்த நிலையில் இந்த படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் மற்ற 7 படங்கள் குறித்த எந்த ஒரு விவரங்களும் ரசிகர்களுக்கு தெரியாத நிலையில், இந்த படங்கள் வெளியாகின்றன. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர் என யாருடைய தகவலும் ரசிகர்களுக்கு தெரியாது. அதனால் இந்த படங்களில் எத்தனை படங்கள் தியேட்டர்களை வெளியாகும், எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் ஆதரவும் இந்த படங்களுக்கு கிடைக்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.





