மலையாள சினிமா துறையில் பெண் நடிகைகள் கூறிவரும் பாலியல் குற்றச்சாட்டுகளால் கேரளா கலைத்துறையே கிடுகிடுத்து போயுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, வௌிப்படையாக நடிகைகள் சிலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் நெருக்கடிகளை, அழுத்தங்களை, நேர்ந்த அனுபவங்களை பகிரங்கமாக பேச துவங்கி விட்டனர்.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பிறமொழிகளில் நடிக்கும் நடிைககளும் மலையாள திரையுலகை போலவே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையிலும் பெண்களுக்கான பாதுகாப்பு கமிட்டி ஏற்படுத்தி, இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா துறையில் இதுபோல் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வந்தால் முதலில் விசாரித்து எச்சரிக்கை செய்யப்படும். மீண்டும் வரம்பு மீறினால் 5 ஆண்டுகள் வரை சினிமா துறையில் பணியாற்ற தடை விதிக்க, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக உதவிகளையும் செய்ய முன்வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கீழ் செயல்படும் பெண்கள் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் நேரிய மங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்துள்ளார். அதில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர், வெளிநாட்டில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த புகாரின்படி ஊன்னுக்கல் போலீஸ் ஸ்டேஷனில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்படி நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஏற்கனவே மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் மீது இதுபோன்ற பாலியல் வழக்குகள் போலீசில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன் என்ற புகார் தவறானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. என் மீதான இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். இதை சட்டரீதியாகவும் எதிர்கொள்வேன், என்று கூறியிருக்கிறார்.





