தீபாவளி பொங்கல் விநாயகர் சதுர்த்தி ஆயுதபூஜை கிறிஸ்துமஸ் புத்தாண்டு என விசேஷ தினங்கள் வந்தாலே பண்டிகை கால உற்சாகங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருவது புதிய படங்கள் ரிலீஸ்தான். கடந்த 1980 90களில் தீபாவளி பொங்கலுக்கு தான் பெரும்பாலும் ரஜினி கமல் நடித்த புதிய படங்கள் ரிலீஸாவது வழக்கம்
தீபாவளி நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து காலையும் மதியமும் அசைவ உணவுகளை ஒரு பிடி பிடித்து விட்டு மதியமோ அல்லது மாலை காட்சியோ குடும்பத்துடன் புது படத்துக்கு செல்வதே பாரம்பரியமாக இருந்து வருகிறது. பண்டிகை நாள் சந்தோஷங்களில் புதிய படங்களை காண்பதும் ஒரு நடைமுறைதான்.
கடந்த ஆண்டில் நடிகர் அஜீத்குமார் நடித்த எந்த படமுமே வெளிவரவில்லை. அதற்கு முந்தைய தீபாவளிக்கும் அஜீத் படம் ரிலீஸாகவில்லை. அதனால் கடந்த 2 ஆண்டுகளாக அஜீத்குமார் படமே வெளிவராத நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அஜீத்குமார் படம் வெளியாக வாய்ப்பில்லை. இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவர் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்கள் வந்துவிட்டன.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து அதாவது ஜனவரி முதல் வருகிற அக்டோபர் வரை நடக்கிற கார் ரேஸில் அவர் கலந்துக்கொண்டு வருகிறார். அதனால் நவம்பர் மாதம்தான் அவர் அடுத்த படத்தின் ஷூட்டிங்கே துவங்க உள்ளது. அதே போல் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ். அதனால் இந்த தீபாவளிக்கு விஜய், அஜீத் படங்கள் ரிலீஸ் இல்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படமும் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகி விடுகிறது. ரஜினி இப்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிவதே அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான். அதனால் ரஜினி படமும் இந்த தீபாவளிக்கு இல்லை என்றாகி விட்டது. அடுத்து கமல் நடித்த தக்லைஃப் படமும் வருகிற 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதையடுத்து கமல் நடிக்கும் அவரது 237வது படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்குகிறார். இந்த படம் குறுகிய படைப்பாக உருவாக்குவதாக சொல்லப்பட்டாலும் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் என்ற திட்டம் கமலுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற டாப் ஸ்டார்களின் படங்கள் வருகிற தீபாவளிக்கு இல்லை என்பது அவர்களது ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.





