மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். தமிழில் கனா கண்டேன் சத்தம் போடாதே இராவணன் கண்ணாமூச்சி ஏனடா மொழி அபியும் நானும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்தாண்டில் அவர் நடித்த ஆடுஜீவிதம் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக உள்ள பிருத்விராஜ் இயக்கத்தில் உருவான படம் எம்புரான். மலையாள சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நாயகனாக மோகன்லால் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களின் நடித்திருக்கின்றனர்.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் என்ற படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் பிருத்விராஜ் எல்2 எம்புரான் படத்தை இயக்கியுள்ளார். லூசிபர் படத்தின் 2ம் பாகமாக எல்2 எம்புரான் என்ற பெயரில் கடந்த மார்ச் 27ம் தேதி வெளியானது. இதுவரை 9 நாட்களில் இந்த படம் 240 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தி உள்ளது. மலையாளத்தில் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எல்2 எம்புரான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த கோகுலம் சினிமாஸ் தயாரிப்பாளர் கோபாலன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தினார்கள். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் எல்2 எம்புரான் படத்தின் இயக்குனர் நடிகர் பிருத்விராஜூக்கும் அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் கடந்த 3 ஆண்டுகளாக உங்களது வருமான வரித்துறை தாக்கலில் சில குளறுபடிகள், சந்தேகங்கள் இருப்பதாகவும் 40 கோடி ரூபாய் வரை உங்களது வருமானத்தில் குளறுபடி இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வரும் 29ம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே எல்2 எம்புரான் படத்தில் ஆட்சேபனைக்குரியது என்று கூறப்பட்ட 17 காட்சிகள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் இப்போது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் ஆகியோருக்கு வருமானவரித்துறை அமலாக்கத்துறை மூலம் இதுபோன்ற இடையூறுகளை, பிரச்னைகளை மத்திய அரசு தரப்பில் தருவது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





