நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த இந்த படம், கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியானது. அந்த படம் குறித்து பேசிய மன்சூர் அலிகான், திரிஷா உடன் நடிக்க பெட்ரூம் சீன் இல்லை என வருத்தப்பட்டதாக பேசினார்.
இதுகுறித்து திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த பிரச்னை சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி, தென்னிந்திய நடிகர் சங்கம் என பலதரப்பிலும் திரிஷாவுக்கு ஆதரவாக, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த பிரச்னை குறித்த தேசிய மகளிர் ஆணையம் மூலம் புகார் அளித்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வைப்பேன். இதை கண்டிப்பாக சும்மா விடமாட்டேன் என திரிஷாவை விட, குஷ்பு அதிக கோபத்தில் பேசினார்.
இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நான் யாருக்கும் பயப்பட அவசியமில்லை. சினிமாவில் எல்லாமே நடிப்புதான். ரேப் காட்சி வந்தால், அது உண்மையாக நடப்பதில்லை. அதுவும் நடிப்புதான். இதை சொன்னதற்காக ஆவேசப்படும் குஷ்பு, நீட் தேர்வில் இறந்தவர்களுக்காக போராடாமல் ஏன் இருந்தார், என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கிடையே இந்த பிரச்னை குறித்த, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஒரு பெண்ணை அவமதித்து, அசிங்கப்படுத்தும் விதமாக பேசிய மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து சென்னை நுங்கம்பாளையம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று நடிகர் மன்சூர் அலிகான் அழைக்கப்படலாம், கைது நடவடிக்கையும் இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





