மலையாள திரைப்பட நடிகர் நடிகைகளுக்காக அம்மா சங்கம் செயல்பட்டு வருகிறது. அம்மா தங்கத்தின் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்று சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த சில மாதங்களாக அம்மா சங்க நிர்வாகத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த அம்மா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், நடிகை ஸ்வேதா மேனன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரவு செலவு கணக்கு விபரங்களில் போதிய வெளிப்படைத் தன்மை இல்லை என உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இதனால் கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில் அம்மா சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை ஸ்வேதா மேனன் அதிரடியாக அறிவித்தார். அத்துடன் தங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்வேதா மேனன் தலைமையிலான 17 பேர் கொண்ட செயற்குழுவும் ஒரே நேரத்தில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவு மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக சங்கத்தின் புதிய நிர்வாகம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மலையாள சினிமா நடிகைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளும் அதனால் ஏற்பட்ட சர்ச்சைகளும் காரணமாக நடிகர் மோகன்லால் தலைமையிலான அம்மா சங்கம் கலைக்கப்பட்டு அதன்பிறகு நடிகை ஸ்வேதா மேனன் தலைமையிலான இந்த நிர்வாகக்குழு செயல்பட்டு வந்தது. ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் சங்க நிர்வாகிகள் முற்றிலுமாக ராஜினாமா செய்து வெளியேறியது பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.





