தமிழ் சினிமாவில் எப்போதுமே, சமகாலத்தில் ஒரே இமேஜில் இரண்டு நடிகர்கள் இருப்பது, வழக்கமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலத்திலேயே எம்ஜிஆர் சிவாஜி என்ற போட்டி வந்துவிட்டது. எம்ஜிஆரை, சிவாஜி அண்ணா என்றுதான் அழைப்பார். என்றாலும், நான் எம்ஜிஆர் ரசிகன், நான் சிவாஜி ரசிகன் என்ற பெருமிதங்களோடு அன்றைய ரசிகர்களுக்குள் ஒரு போட்டி இருந்தது.
இது பிறகு, ரஜினிகாந்த் கமல்ஹாசன் காலத்திலும் அந்த போட்டி தொடர்ந்தது. அன்று முதல் இன்று வரை ரஜினி கமல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருக்கின்றனர். தொழில் ரீதியான போட்டி இருப்பதாக இருவரும் சொல்லிக் கொண்டாலும் அதை திரையில்தான், திறமையில்தான் காட்டுவார்களே தவிர, நிஜத்தில் இருவரும் அண்ணன் – தம்பியை விட ஒருவர் மீது ஒருவர் அதீத பாசம், அன்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
இப்போது தற்காலத்தில் அந்த வரிசையில் அஜீத் -விஜய் போட்டி தொடர்கிறது. ஆனால், எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் போன்ற போட்டி நடிகர்களின் ரசிகர்களை போல் இல்லாமல், இன்றைய சூழலில் இவர்களது ரசிகர்கள் வேற மாதிரியான வெறித்தனத்துடன் இருக்கின்றனர்.
அதாவது, அந்தகாலத்தில் இல்லாத ஒரு தொழில்நுட்ப தகவல் தொடர்பு வசதி, இன்று இருக்கிறது. சமூக வலைதளம் என்ற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு அஜீத் ரசிகர்கள், விஜயை வசைபாடுகின்றனர். அதற்கேற்ப, விஜய் ரசிகர்களும் அஜீத்தை தாக்கி பேசுகின்றனர். இது, பல நேரங்களில் வைரலாகி வருகிறது. ஒரு விதமான பதட்டத்தை, பரபரப்பை சமூக வலைதளங்களில் ஏற்படுத்துகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், வரும் 19ம் தேதி விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே டிரெய்லர் பார்த்து, தங்கள் உற்சாகத்தை வெறியாட்டமாக காட்டிய ரசிகர்கள், வரும் 19ம் தேதி, தியேட்டர்களில் திருவிழா கொண்டாட உள்ளனர். அதுவும் ரசிகர் காட்சிகளுக்கும் அரசு அனுமதி கிடைத்துவிட்டதால், அவர்களது கொண்டாட்டம் வெறித்தனமாக தான் இருக்கும்.
அதே நாளில், அதாவது வரும் 19ம் தேதி அன்று அஜீத் நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சமூக வலைதளங்களை விஜய் நடித்த லியோ படமே ஆக்கிரமித்துக் கொள்ளாமல் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரே நாளில் இருவரும் தங்களை போட்டியாளர்களாக காட்டிக்கொண்டு, வேண்டும் என்றே விஜய், அஜீத் இருவரும் இமேஜ் மெயின்டெயின்ட் செய்வதாகவும் பரபரப்பாக, கோலிவுட்டில் பேசப்படுகிறது.





