2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகவும் சோகமான ஆண்டு என்று தான் கூற வேண்டும். எதிர்பார்த்த எந்த திரைப்படம் கூட மிகப் பெரிய அளவில் வெற்றி பெறாத ஆண்டு இது. குறிப்பாக பொங்கலுக்கு வெளியான அயலான் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன.
அடுத்த மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படமும், இங்கு பாதி பேருக்கு தெரியாமல் போனது. அந்த அளவுக்கு அந்த படம் இருந்தால் ரசிகர்கள் அதனை மறந்து போயினர். இதுபோக 2கே கிட் களின் விருப்பத்தின்படி லவ்வர் திரைப்படம் இருந்ததால் அது சில காலம் ஓடியது.
பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ஜே பேபி திரைப்படம் நன்றாக இருந்தும் அதனை கொண்டாட ரசிகர்கள் தவறிவிட்டனர். இதன் நடுவே மலையாளத்திலிருந்து வெளியான மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம், ஆவேசம் போன்ற திரைப்படங்கள் இங்குள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், மலையாளத்தை விட தமிழ்நாட்டில் அதிக வசூல் பார்த்தது. இது ஒரு பக்கம் இருக்க, தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்ததால், கோலிவுட் திரையுலகம் ரீ ரிலீஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது. இதில் விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம், மீண்டும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
அனேகமாக இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் கில்லி தான் அதிக வசூல் ஈட்டி இருக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த வாரம் வெளியான, ரத்னம் திரைப்படமும் சுமாரான வரவேற்பை பெற்றிருப்பதால் கில்லிக்கே கூட்டம் குவிகிறது. இப்படியான சூழலில் வரும் வாரங்களில் தமிழ் சினிமாவில் ஏராளமான புது திரைப்படங்கள் வெளியாகின்றன.
அதில் வரும் வெள்ளிக்கிழமை, சுந்தர் சி இயக்கத்தில் எடுக்கப்பட்ட அரண்மனை, மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் குரங்கு பெடல் ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கவின் ஸ்டார் திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது. இதுபோக சந்தானம் நடித்திருக்கும் இங்க நான் தான் கிங், மௌனகுரு படத்தின் இயக்குனர் எடுத்திருக்கும் ரசவாதி, அமீர் நடித்திருக்கும் உயிர் தமிழுக்கு ஆகிய திரைப்படங்களும் 10ஆம் தேதியையே குறி வைத்திருக்கிறது. மே 16 அல்லது 17ஆம் தேதி விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜாவும் வெளியாகிறது.





