விஸ்வாசம், வீரம், விவேகம், அண்ணாத்த உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், வரும் 14ம் தேதி சூர்யா நடிப்பில் கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று கால படமான இதில் சூர்யா மாறுபட்ட 2 வேடங்களில் நடித்திருக்கிறார். திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகை படமாக எச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த துணிவு படம் வெளியானது. துணிவு படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அப்போது தியேட்டர் முன் லாரி மீது இருந்து தவறி விழுந்த ஒரு ரசிகர் இறந்து போனார். அதன் பிறகு எந்த ஒரு படத்திற்கும் தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
அதன்பிறகு ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு முதல் காட்சி காலை 9 மணிக்கு என அரசு அனுமதி வழங்கி வருகிறது. ஆனால் தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சி 7 மணிக்கு காட்சிகள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுகின்றன. முதல் காட்சி பார்த்தாக வேண்டும் என்று துடிக்கும் தமிழ் ரசிகர்கள், தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மற்ற மாநில ஊர்களுக்குச் சென்று அங்குள்ள தியேட்டர்களில் படத்தை பார்த்து விடுகின்றனர்.
வரும் 14ம் தேதி பான் இந்தியா படமாக சூர்யா நடித்த கங்குவா படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதிக்க கோரிக்கை வைத்து தமிழக அரசிடம் தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மாநிலங்களில் நவம்பர் 14ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சிகள் ஆரம்பமாகின்றன.
தமிழகத்திலும் அதிகாலை காட்சிக்கு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அது குறித்து அப்டேட் கொடுக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஒரு படத்திற்கு மட்டும் தமிழக அரசு எப்படி சிறப்பு சலுகை கொடுக்கும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி கொடுத்தால் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட மற்ற ஹீரோக்களின் ரசிகர்களுக்கு கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
துணிவு படத்திற்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அஜீத்குமார் நடித்து எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. அந்த படத்தின் அதிகாலை காட்சி நேரத்தில் ஏற்பட்ட ஒரு விபத்துதான், அதிகாலை காட்சிகள் மறுப்புக்கு காரணமாக உள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில் ரசிகர்கள் எல்லை மீறி நடப்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு, அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.





