90களில் வெளியான படங்களில் கவுண்டமணி இல்லாத படங்கள் வெகுசில என்று கூறும் அளவிற்கு அனைத்து படங்களிலும் இடம்பெற்று தனது காமெடி மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் கவுண்டமணி. இவர் செந்திலோடு இணைந்து செய்த காமெடிகள் ஏராளம்.
இன்றளவும் கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழம் காமெடி பிரபலம் என்று கூறலாம். கவுண்டமணி காமெடியனாக நடித்தாலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு கவுண்டமணி தான் படங்களில் நடிப்பதை பெரிய அளவில் குறைத்துக் கொண்டார் என்றே கூற வேண்டும். ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு அவர் “49 ஓ” என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து “வாய்மை”, “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” போன்ற படங்களில் அவர் நடித்தார். ஆனாலும் அந்த படங்கள் எதுவும் பெரிதாக பேசும் வகையில் இல்லை. வசூல் ரீதியாகவும் அந்த படங்கள் எல்லாம் தோல்வியுற்றன.
இந்த நிலையில் 2016 க்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து அவர் நடிக்க இருக்கும் படம் தான் “ஒத்த செருப்பு முத்தையா” இந்த படத்தை சாய் ராஜகோபால் இயக்குகிறார், ஷஷி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. யோகி பாபு, முத்துக்காளை, வையாபுரி, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் இப்படி மிகப்பெரிய காமெடி பட்டாள்களோடு இந்த படம் தயாராக உள்ளது.
கவுண்டமணிக்கு ஜோடியாக இதில் ராஜேஸ்வரி நடிக்க உள்ளார். அது மட்டுமல்லாது நாகேஷின் பேரன், சிங்கமுத்துவின் மகன் மற்றும் மயில்சாமி மகன் ஆகிய மூன்று பேரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து பேசி உள்ள இயக்குனர் ராஜகோபால்,
நான் இந்த படம் குறித்த கதையை கவுண்டமணி இடம் சொன்னபோது அவர் மிகவும் ரசித்து கேட்டு விட்டு நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று கூறினார். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் படியாக மிகச் சிறந்த ஒரு நகைச்சுவை படமாக இது இருக்கும்.
கவுண்டமணி நடிப்பில் உருவான எழுவதற்கும் மேற்பட்ட படங்களில் நான் அவருக்காக வசனம் எழுதியுள்ளேன். அதோடு துணை இயக்குனராகவும் இணைப்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளேன். அதே சமயம் சில படங்களை இயக்கியும் உள்ளேன். நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும் என்று சாய் ராஜகோபால் கூறியுள்ளார்.





