தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் பா ரஞ்சித். அவருக்கு முன்பு ஏராளமான இயக்குனர்கள் தலித் சமூகம் தொடர்பான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், அது அத்தனையிலிருந்தும் வேறுபடுத்தி காட்டி அந்த மக்களின் வாழ்க்கையை கண்முன்னே விரிவுபடுத்தி இருந்தார் பா ரஞ்சித்.
பா ரஞ்சித் வந்த பிறகு தான் தமிழ் சினிமாவில் தலித் சமூகம் தொடர்பான திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்க ஆரம்பித்தது என்று கூறலாம். சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக கூறி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் பா ரஞ்சித்.
அது மட்டுமல்லாமல் தான் இயக்கும் திரைப்படத்திலும் தலித் சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களை கூறியிருக்கிறார். இதற்கு உதாரணமாக அவரது தயாரிப்பில் முதன் முதலில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தைக் கூறலாம். இப்படியாக பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டு இன்று ஆலமரமாக விரிந்து இருக்கிறார்.
இந்த நிலையில், தலித் திரைப்படங்களைக் கொண்டாடும் வகையில் பி கே ரோஸி பெயரில் திரைப்பட விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் நடந்த கலந்துரையாடலில் பா ரஞ்சித் பங்கேற்றார். இதே போல் ப்ளூ ஸ்டார் பட இயக்குனர் ஜெயக்குமார், மலையாள இயக்குனர் பிஜு தாமோதரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அப்போது தலித் சினிமாக்கள் பற்றியும், அவர்களின் பிரச்சனையை தனியாக கூற வேண்டியதன் அவசியத்தை பற்றியும் விரிவாக பேசினர். தலித் மக்களின் கதைகளை எடுப்பதில் ஏற்படும் சவால்கள் குறித்தும் எடுத்து வைத்தனர். அப்போது பா ரஞ்சித்திடம் பேசிய பிஜு தாமோதரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா போன்ற படத்தை எடுத்ததை பாராட்டினார். அதேசமயம் ரஞ்சித்தின் அரசியல் ரஜினிக்கு தெரியுமா என்பதில் சந்தேகம் தான் என்றும் கூறினார்.
இதனைக் கேட்டதும் ரஞ்சித் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், ரஜினி ரசிகர்கள் பா ரஞ்சித் மீது கடும் கோபத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர். இயக்குனரின் திரை உலக வாழ்க்கையையே உயரத்திற்கு தூக்கிச் சென்றவர் ரஜினிகாந்த் தான் என்றும், கபாலி காலா என இரண்டு திரைப்படங்களை இயக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்ததையும் ரஞ்சித் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். வாய்ப்பு வழங்கிய நடிகரை எப்படி நக்கல் அடிக்க தோன்றுகிறது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





