தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். விருதுகளால் தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளாமல், விருதுகளுக்கே பெருமை சேர்க்கும் உன்னதமான ஒரு திரைக்கலைஞன் கமல்ஹாசன் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தக்லைப் படம் வருகிற 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸாகிறது.
இப்போது நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் 45 தினங்களாக தங்கியிருக்கிறார். அங்கு அவர் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகிறார். இன்னும் சில வாரங்களில் அந்த பயிற்சி வகுப்புகள் முடிவடைய இருப்பதால், அதன்பிறகு சென்னை திரும்ப உள்ளார்.
கமல்ஹாசன் தமிழ்நாட்டுக்கு திரும்பியவுடன், அவரது தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் அமரன் படத்தின் வெற்றி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கமல்ஹாசன் முன்னிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், படக்குழுவினருக்கு கேடயங்கள் வழங்க உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்ய மையம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். சினிமாவில் வெற்றி பெற்ற அவரால், அரசியலில் பெரிய வரவேற்பை மக்களிடம் பெற முடியவில்லை. துவக்கத்தில் திமுகவை எதிர்த்த கமல்ஹாசன், இப்போது திமுகவுக்கு விசுவாசியாக மாறியிருக்கிறார். இது அவரது ரசிகர்களையே ஏமாற்றமடைய செய்துள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 1990களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் குணா. சந்தானபாரதி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞராக கமல் அசத்தலான நடிப்பை தந்திருந்தார். குணா படத்தில் கமல், எஸ் ஜானகி பாடிய கண்மணி அன்போடு காதலன் நான்… பாடல் இன்றளவும் டிரண்டிங் ஆக இருந்து வருகிறது.
நாளை வெள்ளிக்கிழமை ( 29ம் தேதி) குணா படம் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான மலையாள படம் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல், அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அதே போல் ரி ரிலீஸ் செய்யப்படும் குணா படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





