நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் வில்லனாக நடிகர் ரவிமோகன் நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டரிலும் அதர்வா நடித்துள்ளார். மேலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் வரும் பொங்கலுக்கு ஜனவரி 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.
பராசக்தி படத்தில் இருந்து ஏற்கனவே 2 சிங்கிள் பாடல்கள் வெளியான நிலையில் 3வது பாடலும் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே பராசக்தி படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஆர்வம் காட்டி வருகிறது. அதில் முக்கிய நடவடிக்கையாக பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக படக்குழு தரப்பில் அனுமதி கேட்டு தேதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் நேரு விளையாட்டு அரங்கில் முக்கிய விளையாட்டு போட்டி நடத்தப்படுவதால் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி கிடைக்கவில்லை.
நேரு விளையாட்டு அரங்கம் என்றால் 5 ஆயிரம் பேருக்கு மேல் பார்வையாளர்களுக்கு இடவசதி உள்ளது. அங்கு அனுமதி கிடைக்காததால் படக்குழு பலத்த ஏமாற்றம் அடைந்த நிலையில், வேறு இடங்களை தேடி வருகிறது. சாய்ராம் பொறியியல் கல்லூரி நல்ல சாய்ஸ் என்றாலும் அங்கு 5 ஆயிரம் பேர் அளவுக்கு பார்வையாளர்களுக்கு இடவசதி இல்லை.
இப்போது மழை காலமாக இருப்பதால் சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ திறந்தவெளி மைதானத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவதும் பராசக்தி படக்குழுவுக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. ஆனால் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினால் மட்டுமே படத்துக்கு நல்ல பப்ளிசிடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து திருச்சி அல்லது மதுரையில் பராசக்தி இசை வெளியீட்டு விழாவை நடத்தலாமா என்ற ஆலோசனையில் படக்குழுவினர் இருந்து வருகின்றனர். திருச்சி சிவகார்த்திகேயன் பிறந்து வளர்ந்த சொந்த ஊர். மதுரையிலும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பு ஆதரவு உள்ளது. அதனால் திருச்சி அல்லது மதுரையில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.





