தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சொந்த தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ராம்சரணனின் சித்தப்பா. மேலும் ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் பவன் கல்யாண் இருந்து வருகிறார்.
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர். அவர் சொந்தமாக பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கிய நிலையில் அரசியலில் பெரிதாக வரவேற்பு பெற முடியவில்லை. அதே நேரத்தில் அவரது தம்பி அரசியல்வாதியாக ஆந்திரா அரசியல் களத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார். இப்போது ஆந்திரா மாநில துணை முதல்வராக உள்ளார்.
நடிகர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். 10 வயதுக்குட்பட்ட அந்த சிறுவன் படித்து வரும் சிங்கப்பூரில் உள்ள அந்த பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிறுவன் மார்க் ஷங்கருக்கு கால் மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நடிகர் பவன் கல்யாண் நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடனடியாக ஆந்திராவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றனர். அங்கு அவர்களது மகன் மார்க் ஷங்கருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தங்களது மகனை சிங்கப்பூரில் இருந்து அழைத்துக்கொண்டு ஆந்திராவுக்கு திரும்பியுள்ளனர்.
தனது தம்பி பவன் கல்யாண் மகனுக்கு ஏற்பட்ட தீ விபத்து பாதிப்பு குறித்து நடிகர் சிரஞ்சீவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்கள் மகன் மார்க் ஷங்கர் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடைய வேண்டும். எங்கள் குலதெய்வம் ஆஞ்சநேய சுவாமியின் அருளால் கருணையால் அவர் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் எங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட மக்களும் ரசிகர்களும் மார்க் ஷங்கர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என் குடும்பம் சார்பாக நன்றி என்று அந்த பதிவில் நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





