- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன் கரகரப்பான காட்டு குரலுக்காக வெளியே அலைபாய்கிறது காற்று - இயக்குனர் பாரதிராஜா உடல் நலம்...

உன் கரகரப்பான காட்டு குரலுக்காக வெளியே அலைபாய்கிறது காற்று – இயக்குனர் பாரதிராஜா உடல் நலம் குறித்து பதிவிட்ட கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அடையாளமாக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை யதார்த்தம் என்ற களத்துக்குள் நகர்த்திச் சென்ற முதல் படைப்பாளி. செம்மண் புழுதி படிந்த குக்கிராமங்களுக்குள் கேமராவை கொண்டு சென்று அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையை சமூக சூழல்களை திரையில் கொண்டு வந்து வந்த வித்தகர்.

என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீர குரலுடன் கணீரென ஒலிக்கும் அந்த வசீகர வார்த்தைகளில் மயங்காதவர்கள் யாருமில்லை. நல்ல படைப்புகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்து இயக்குனர் இமயம் என்ற புகழுரைக்கு சொந்தக்காரராக மாறியவர். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை திரையில் காட்டி அசத்தியவர்.

- Advertisement -

இப்போது 84 வயதுகளை கடந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து திரும்பிய கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா குறித்த ஒரு பதிவை கவிதையாக வெளியிட்டுள்ளார்.

அதில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறி வருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன். என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார்.

- Advertisement -

அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள்! 45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம் எங்கள் உள்ளங்கைகளுக்கிடையே நசுங்கியது. நான் மட்டுமா? கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே! எங்கள் கிராமத்துச் சூரிய காந்திப் பூக்களும் அவர் சுகம் கேட்குமே!

வைகை அலைகள் வா வா சொல்லுமே! மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக ‘ஆஸ்பத்திரி’க்கு வெளியே அலைபாய்கிறது காற்று என்று தனது எக்ஸ் பக்கத்தில் தனது நண்பர் பாரதிராஜா குறித்து கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து பதிவிட்டு விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்