தமிழ் சினிமாவில் கவிஞராக பாடல் ஆசிரியராக கொண்டாடப்படுபவர் கவிப்பேரரசு வைரமுத்து. பல ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர். தன் கவிதைகளால் மக்களின் மனதை கவர்ந்தவர். மத்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 7 முறை வென்ற உன்னத கவிஞர். மேலும் சாகித்ய அகாதமி பத்மஸ்ரீ பத்மபூஷண் போன்ற விருதுகளை பெற்றவர்.
சில கலைஞர்களுக்கு விருதுகளால் பெருமையல்ல, அவர்களால்தான் அந்த விருதுகளுக்கே பெருமை என்ற ரகத்தை சேர்ந்தவர் வைரமுத்து. தனிப்பட்ட முறையில் அவர் மீது இருக்கும் சில விமர்சனங்களை தவிர்த்துவிட்டு ஒரு கவிஞராக எழுத்தாளராக அவரை பார்த்தால் தமிழ் சினிமாவின் பெருமை, கவிதை உலகின் பொக்கிஷம், இலக்கிய உலகில் தன்னிகரற்ற மனிதராக போற்ற முடியும்.
பாடகி சின்மயி அவர் மீது வைத்த சில குற்றச்சாட்டுகள், திமுக கட்சியின் ஆதரவாளராக அவர் இருப்பது என்ற இரண்டு விஷயங்கள் மட்டுமே அவர் மீதான புகழுக்கு களங்கம் சேர்க்கின்றன. தொடர்ந்து வைரமுத்து பற்றி இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மற்றபடி ஒரு படைப்பாளியாக வைரமுத்து கொண்டாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்.
இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாவாக பாட்டியாக மனைவியாக அண்ணியாக தங்கையாக அக்காவாக சித்தியாக நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பெண்களின் புகழை அன்னையர் மேன்மையை பற்றி பலரும் சிலாகித்து பதிவுகளை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை, கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் காலமாகி விட்டார். முதுமை காரணமாக அவர் மறைந்த நிலையில் தனது தாயார் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் அது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, என்னை பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் ஞாயிறு மாலை நடைபெறும் என்று வைரமுத்து பதிவில் கூறியிருக்கிறார். தனது தாயாரை இழந்து வாடும் கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.





