அன்றைய தமிழ் சினிமாவில் கவியரசு கண்ணதாசன் கவிஞர்கள் வாலி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மருதகாசி புதுமைப்பித்தன் போன்றவர்கள் பாடல் எழுதிய காலகட்டத்தில் பாடல் வரிகளில் இலக்கியம் இருக்கிறதோ இல்லையோ நல்ல நயமும் கருத்தாழம் மிக்க சிந்தனை வரிகளும் இருந்தன. பாடலுடன் சமுதாயத்துக்கு தேவையான கருத்துகளும் வெளிப்பட்டன.
தூங்காதே தம்பி தூங்காதே திருடாதே பாப்பா திருடாதே அச்சம் என்பது மடமையடா என பாடல்களின் துவக்க வரிகளிலேயே சமுதாயத்துக்கு கருத்து சொல்லும் வரிகளை போட்டு கவிஞர்கள் எழுதுவதுதான் வழக்கம். காதல் பாடல்களில் கூட வார்த்தைகளில் இனிமையுடன் இலக்கிய வளமும் செறிவாக காணப்படும்.
ஆனால் இப்போதெல்லாம் இசையின் இரைச்சலுக்கு நடுவில் பாடல் வரிகளே புரிவதில்லை. இதிலும் பலர் பழைய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் போட்டு சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. பாடல்களில் இருந்த இனிமையும் கருத்துகளும் எப்போதோ மலையேறி போய்விட்டன. கவிதைகள் இல்லாத உரைநடைகளாக பாட்டெழுதும் டிரண்ட் ஆக இப்போது உள்ளது.
இதற்கிடையே ஜெயம் ரவி அசின் நதியா உள்ளிட்டோர் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இதில் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடல் காட்சியில் ஜெயம் ரவி அசின் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படி அபசகுனமா ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ என பலருக்கு அந்த பாடல் உறுத்தலை தந்தாலும் பாடல் எப்படியோ ஹிட் ஆகி விட்டது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கவிஞர் யுகபாரதி கூறியதாவது, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ என்று ஒரு பாடல் எழுதியிருப்பேன். இந்த பாட்டுக்கு நான் முதலில் எழுதின பாட்டு கண்டேன் கண்டேன் உன் கண்கள் நான் கண்டேன் என்றுதான் எழுதியிருந்தேன். ஆனால் டைரக்டர் வாங்கி படிச்சிட்டு ரொம்ப இலக்கியமா இருக்கு என்று சொல்லிட்டார்.
அப்புறம் கடுப்பாகி கோபத்துல கண்டேன் கண்டேன் என்ற வார்த்தைகளை எடுத்து ஐயோ ஐயோ ஐயையோ என்று எழுதிக் கொடுத்தேன். அப்புறம் டைரக்டர் பார்த்துட்டு, சார் பயங்கர டிரண்டியா இருக்கு என்று சொல்லிட்டார். அதைவிட காமெடி என்னன்னா அந்த பாட்டு பயங்கரமா ஹிட் ஆயிடுச்சு. அப்புறம் கண்டேன் கண்டேன் பாட்டை எடுத்து விஜய் நடித்த மதுர படத்துக்கு கொடுத்துட்டேன் என்று கவிஞர் யுகபாரதி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





