தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் ரவி மோகன் என முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளிலும் திரிஷாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தாக்குப்பிடித்து நாயகியாக இன்னும் நடித்து வரும் சிறப்புக்கு உரியவர்கள் நடிகை திரிஷா மற்றும் நடிகை நயன்தாரா இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நடிக்க வந்த பல நடிகைகள் இன்று அம்மா அக்கா அண்ணி சித்தி கேரக்டர்களில் டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழில் நடிகை திரிஷா கடைசியாக நடித்த குட் பேட் அக்லி படம் வெளியானது. அதே போல் தக்லைஃப் படத்திலும் அவர் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதே போல் சூர்யாவுடன் திரிஷா நடித்த கருப்பு படமும் அடுத்த ஆண்டில் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸாக உள்ளது. 40 வயதுகளை கடந்தும் நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷா தேனாம்பேட்டையில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம நபர்கள் உங்கள் வீட்டுக்குள் வெடிகுண்டு வைத்துள்ளோம். சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு திரிஷாவின் வீடு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதே போல் நடிகர் எஸ்வி சேகர் தமிழக கவர்னர் ஆர் என் ரவி மற்றும் பாஜக தலைமை அலுவலகத்துக்கும் இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அங்கும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
ஆனால் சோதனைகளின் முடிவில் நடிகை திரிஷா நடிகர் எஸ்வி சேகர் பாஜக தலைமை அலுவலகம் தமிழக கவர்னர் இல்லாம் என எங்குமே வெடிகுண்டு இருக்கவில்லை. வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் வதந்தி என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த வாரத்தில் நடிகர் விஜய் வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





