நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கருப்பு படம் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்த படம் வெளியான ஒரே மாதத்தில் 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. நடிகர் சூர்யா நடித்த படங்களில் இதுவரை அதிகபட்சமாக சிங்கம் 2 படம் மட்டுமே ரூ. 160 கோடி வசூல் என்ற சாதனையை செய்திருந்தது.
ஆனால் கருப்பு படம் சிங்கம் 2 படத்தை விட இரட்டிப்பு வசூலை கடந்து ரூ. 340 கோடி வசூலை அள்ளிவிட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுக்கு கருப்பு ஒரு சூப்பர் கம்பேக் தந்திருக்கிறது. அதனால் அடுத்து சூர்யா நடிப்பில் திரைக்கு வர உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் 50வது படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி சூர்யாவின் 50வது படத்தை டைரக்ட் செய்யப் போவது கோலமாவு கோகிலா டாக்டர் ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களை இயக்கிய நெல்சன்தான் என்று சொல்லப்படுகிறது.
தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவதாக ஒரு கமிட்மென்ட் இருந்தது. இதற்காக நெல்சனுக்கு ஜெயிலர் படம் உருவான போதே கணிசமான தொகை அட்வான்ஸ் ஆக தரப்பட்டுள்ளது.
ஆனால் ஜூனியர் என்டிஆர் இப்போது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனால் நெல்சன் இயக்கத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பில்லை. அதனால் நடிகர் சூர்யா நடிக்கும் 50வது படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ள நிலையில், ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிய நெல்சனே சூர்யா 50 படத்தை இயக்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
எப்போது நெல்சன் இயக்குனம் படம் என்றாலே அங்கு இசையமைப்பாளர் பெயராக இருப்பது அனிருத் தான். இந்த முறையும் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 50 படத்திற்கு இசையமைக்க போவதும் அனிருத் தான். நெல்சன் சூர்யா அனிருத் இந்த கூட்டணி காம்போவே படத்துக்கு பெரிய வைப்பை தருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். கருப்பு பட வசூலை விட சூர்யா 50 படம் வசூலை குவித்து சாதனை படைத்து விடும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





