“கேஜிஎஃப் 1”, “கேஜிஎஃப் 2” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து “சலார்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். “கேஜிஎஃப்” போலவே இத்திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. “சலார்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் சமீபத்தில் வெளிவந்தது. “கேஜிஎஃப்” போலவே மிகவும் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

“சலார்” திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். அதே போல் இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளிவர உள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது கமல்ஹாசனும் இயக்குனர் பிரசாந்த் நீலும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டார்களாம். இதனை கொண்டு பார்க்கும்போது “சலார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பிரபாஸின் “பிராஜெக்ட் கே” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அதே போல் தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
மேலும் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து தயாரித்தும் வருகிறார். இவ்வாறு ஒரு பிசியான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசன் வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் “கேஜிஎஃப்” இயக்குனரின் அடுத்த படமான “சலார்” இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





