தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்த பிரபல நடிகை அவர். தமிழில் தீபாவளி வெயில் ஜெயம் கொண்டான் ஆர்யா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டில் கேரளாவில் ஷூட்டிங் முடிந்த பிறகு கேரவனில் சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து மிரட்டியது.
பிறகு அவரை காரில் கடத்திச் சென்ற அந்த கும்பல் காருக்குள்ளேயே பாலியல் துன்புறுத்தல் செய்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கும்பபை கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடநது வந்தது. கடந்த வாரத்தில் நடிகை பாலியல் வழக்கில் இருந்து மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். திலீப் விடுதலை செய்யப்பட்டது குறித்து கேரள நடிகைகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திலீப் விடுதலை குறித்து நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி பிரபல நடிகை மஞ்சுவாரியர் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். இவர் தமிழில் வேட்டையன் விடுதலை 2 படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். மஞ்சு வாரியர் வெளியிட்ட ஒரு வலைதள பதிவில், மதிப்பிற்குரிய நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் முழுமையான நீதி கிடைக்கவில்லை.
ஏனென்றால் குற்றம் செய்தவர்கள் மட்டுமே இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதை திட்டமிட்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பயமுறுத்தும் உண்மை. அவர்கள் தண்டிக்கப்படும்போதுதான் உயிர் வாழ்வதற்கான நீதி முழுமை அடையும் என்று அதில் நடிகை மஞ்சு வாரியர் கூறியிருந்தார். இது இணையத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட அந்த நடிகையும் மஞ்சு வாரியரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் சினிமா இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில் அமீர் கூறியிருப்பதாவது, பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதியாகி விடாது. இந்த விஷயத்தில் நான் நடிகை மஞ்சுவாரியரின் பக்கமே நான் நிற்கிறேன் என்று அமீர் அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





