இயக்குனர் பிரபுசாலமன் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக கவனிக்கப்படும் ஒரு படைப்பாளியாக இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் வெளிவந்த மைனா, கும்கி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. யதார்த்தமான சினிமா தரும் இயக்குனர்களில் ஒருவராக பிரபுசாலமன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள், வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகமாகும் ஒரு புதிய படத்தை இயக்குனர் பிரபுசாலமன் டைரக்ட் செய்து வருகிறார். வனிதா விஜயகுமார்- ஆகாஷ் தம்பதியின் மகன் விஜய் ஸ்ரீஹரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தங்கைதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோவிகா என்றும் கூறப்படுகிறது.
ரோஜா கம்பைன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை, விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சில மாதங்களாக கேரளாவில் முக்கிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சிங்கம் ஒன்று நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது கும்கியில் யானை போல, இந்த படத்தில் சிங்கத்தின் கேரக்டர் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் பிரபுசாலமனின் மகள், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்றும் சில தினங்களாக தகவல் பரவியது. இதையடுத்து கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கும் டைரக்டர் பிரபுசாலமனை போனில் தொடர்புகொண்ட சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், உங்கள் மகளை எங்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில், அந்த படத்தில் பிரபுசாலமன் மகள் நடிக்கவில்லை என்பதே உண்மை. அவர் யுபிஎஸ்சி தேர்வுக்காக வீட்டில் இருந்து தீவிரமாக படித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி என, பிரபுசாலமனே பலரிடமும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
பிரபுசாலமன் இயக்கும் இந்த படத்தில் வனிதா விஜயகுமார் மகனுக்கு ஜோடியாக, கதாநாயகியாக தேஜஸ்வானி என்ற நடிகைதான் நடித்து வருகிறார். பிரபு சாலமன் மகள் நடிக்கவில்லை என்பது உறுதியான நிலையில், இப்படி பலரும் தவறான புரளிகளை கிளப்பிவிட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்துகின்றனர் என்றும் டைரக்டர் பிரபு சாலமன், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டு இருக்கிறார்.





