நடிகர் விஜய் கடைசியாக நடிக்கிற படம் தளபதி 69 படப்பிடிப்பு. இன்று பையனூரில் துவங்கியுள்ளது. பாடல் காட்சியுடன் முதல் நாள் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று தளபதி 69 படத்தின் பூஜை விமரிசையாக நடந்தது. இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, வில்லன் நடிகர் பாபி தியோல் மற்றும் இயக்குனர் எச் வினோத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
நடிகர் விஜய் இந்த படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்வதாக ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதுதான் அவர் நடிக்கப் போகிற கடைசி படம் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை, ஏமாற்றத்தை தந்திருக்கிறது. அரசியலுக்கு போனாலும், ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது, தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சினிமாவில் அவரை ரசித்து ஏற்றுக்கொண்ட அளவுக்கு, அரசியலில் அவருக்கு மக்கள் மத்தியில் போதிய ஆதரவும், வரவேற்பும் கிடைக்குமா என்பதில் குழப்பமும், சந்தேகமுமே நிலவுகிறது. எனினும் வருகிற சட்டசபை தேர்தல்தான் இதற்கு பதில் சொல்லும்.
அதே நேரத்தில் வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற கிராமத்தில், தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில்தால் தனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விஜய் அறிவிக்க இருக்கிறார். அதனால் அந்த மாநாடு குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக நடிகர் விஜய், இதுவரை அவர் நடித்து வந்த படங்களில் ஷூட்டிங் வந்தால், மாலை 6 மணி வரைதான் நடிப்பார். அதன்பிறகு வீட்டுக்கு கிளம்பி சென்றுவிடுவார். இரவு நேர படப்பிடிப்பில் அவர் பெரும்பாலும் கலந்துக்கொள்வது இல்லை. லியோ படத்துக்கு சில இரவுகள் படப்பிடிப்பு நடத்த லோகேஷ் கனகராஜ் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் சம்மதித்தார். அதே போல் வாரந்தோறும் ஞாயிறு அவர் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் பிரேக் எடுத்துக் கொள்வதே வழக்கம்.
ஆனால் தற்போது தளபதி 69 படத்தில் நடிக்க நடிகர் விஜய் புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அதாவது தளபதி 69 படப்பிடிப்பு முடியும் வரை, மாதந்தோறும் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார். ஞாயிறு தினங்களிலும், தேவைப்பட்டால் இரவு நேரங்களிலும் படப்பிடிப்பில் பங்கேற்பார். ஆனால் 10 நாட்கள் பிரேக் எடுத்துக்கொள்வார். மாதந்தோறும் அந்த 10 நாட்களும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளில் விஜய் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





