நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரே படத்தில் உச்சத்துக்கு போன ஒரு நடிகர். சில நடிகர்களுக்கு மட்டுமே இதுபோன்ற அதிர்ஷ்டம் அடிக்கும். சில காமெடி நடிகர்கள் ஒரு காட்சியில் நடித்தே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவது போல, லவ்டுடே படம் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன்.
லவ்டுடே படத்துக்கு முன்பே, ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து கோமாளி என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இதுவும் வெற்றிப்படம்தான். பல ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு வரும் ஜெயம் ரவி, சமூக வலைதளங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பார்த்து பிரமித்து போய்விடுவார். காமெடியுடன் சென்டிமென்ட் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதன்பிறகுதான், லவ்டுடே என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதனே நடித்தார். காதலிக்கும் இருவர் தங்களது மொபைல் போன்களை ஒருநாள் மாற்றிக்கொண்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகி, பலமடங்கு லாபத்தை குவித்தது.
லவ்டுடே படத்தின் அபார வெற்றிக்கு பிறகு வேறு படங்களை ஒத்துக்கொள்ளாத பிரதீப் ரங்கநாதன், இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் முதலில் கேட்ட சம்பளம் ரூ. 20 கோடி. அதன்பிறகு ரூ. 5 கோடி குறைத்துக்கொண்டு ரூ. 15 கோடி சம்பளத்தில் நடிக்க அவர் சம்மதித்தாக தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை அடுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கிய மாரிமுத்து டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆகியிருக்கிறார். அந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான தனது சம்பளம் ரூ. 10 கோடி என பிரதீப் ரங்கநாதன் கேட்டதால், தயாரிப்பு நிறுவனம் திடுக்கிட்டு போயுள்ளது.
ஏனெனில் கோமாளி படத்துக்கு பிறகு, லவ்டுடே படத்தில் ஹீரோவும் நானே, டைரக்டரும் நானே என்று வந்த பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான், லவ்டுடே படத்தை தயாரித்தது. அந்த படம் தந்த வெற்றி மூலமே, பிரதீப் ரங்கநாதன் பெரிய ஹீரோவாக மாறினார். இப்போது அதே நிறுவன தயாரிப்பில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் கேட்கிறாரே என அதிர்ச்சியடைந்துள்ளது. ரூ. 15 கோடிதான் என் சம்பளம். என் படத்தை தயாரித்த நிறுவனம் என்பதால்தான் ரூ. 5 கோடி குறைத்து ரூ. 10 கோடியாக கேட்கிறேன் என, சமாதானம் பேசி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.





