பிரதீப் ரங்கநாதன் தற்போது இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இதனை சுருக்கி எல் ஐ கே என்று அழைக்கிறார்கள். லவ் டுடே திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, விக்னேஷ் சிவன் உடன் பிரதீப் ரங்கநாதன் கை கோர்த்தார். அப்போதே இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரும் படத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மிக முக்கியமாக பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் நடித்தார்.
இதன் காரணமாகவே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் எகிறியதால், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் இடையே சிறிய முரண்பாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இந்த இடைவேளையில், அஸ்வந்த் மாரிமுத்து உடன் இணைந்து டிராகன் என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.
தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற, தற்போது அனைத்து பணிகளும் முடிவு பெற்றுள்ளன. அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து டீசரும் வெளியானது. அதில் 2040 ஆம் ஆண்டு நடப்பது போன்று கதை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சயின்டிபிக் கலந்த காதல் திரைப்படமாக இதனை சொல்லி இருக்கிறார் விக்னேஷ் சிவன். தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் மற்றொரு திரைப்படமான டியூட் படமும், தீபாவளி பண்டிகைக்கே ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்த கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடித்திருக்கிறார். ரொமான்டிக் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதீப் ரங்கநாதன், தீபாவளி பண்டிகைக்கு தனது இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் எந்த திரைப்படம் வெளியானாலும் நிச்சயம் என்டர்டைன்மெண்டாக அமையும் என்று கூறி இருக்கிறார். அதேபோல ஜாக்கிசானை வைத்து திரைப்படம் இயக்குவதுதான் தனது கனவு என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.





