தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயம் ரவி நாயகனாக நடித்த அவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லவ்டுடே என்ற படத்தை டைரக்ட் செய்த பிரதீப் ரங்கநாதன் அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.
முதல் படத்தில் இயக்குனராக ஜெயித்த அவர் 2வது படத்தில் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இதில் சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்று ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இதையடுத்து ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த படம் டிராகன். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்த ஆண்டில் வெளியான மாஸ் ஹிட் படங்களில், ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த படங்களில் டிராகனும் ஒன்று. இதில் கயாடு லோஹர் அனுபமா பரமேஸ்வரன் இந்துமதி ஜார்ஜ் மரியான் கேஎஸ் ரவிக்குமார் விஜே சித்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த சூழலில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் எல்ஐகே. இந்த படம் வருகிற செப்டம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியான நிலையில் இப்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
வருகிற தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸாக வாய்ப்பில்லை. ஏனெனில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் என்ற படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பரில் எல்ஐகே வருமா என்றால் அது மழைக்காலம் என்பதால் சென்னையில் மழைவெள்ளம் வந்துவிட்டால் படத்தின் வெற்றியை அது கடுமையாக பாதிக்கும் என படக்குழு அச்சப்படுகிறது. அதனால் அடுத்த ஆண்டில் பிப்ரவரி 14ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
எல்ஐகே படத்தின் ரிலீஸ் தேதியை இப்படி தள்ளிவைக்க முக்கிய காரணம், இந்த படம் சரியாக வியாபாரம் நடக்கவில்லை. கோமாளி லவ்டுடே டிராகன் என தொடர் வெற்றிப் படங்களை பிரதீப் ரங்கநாதன் தந்திருந்தாலும் அவை எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள். ஆனால் எல்ஐகே படத்தின் மொத்த பட்ஜெட் 107 கோடி ரூபாய் என்பதால் அதற்கேற்ற வியாபாரம் இன்னும் நான் தியேட்டரிக்கல் நடக்காததே படம் ரிலீஸ் தள்ளிப்போக முக்கிய காரணம் என்றும் படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.





