தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். ரஜினி கமல் விஜய் படங்களை போலவே அஜீத்குமார் நடித்த படம் வெளியாகும் நாளும் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் போல ஒரு பண்டிகை நாளாக தான் இருக்கிறது. பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி குத்தாட்டம் போட்டு அவரது படத்தை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.
துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் 6ம் தேதி வெளியான அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் அஜீத்குமார் ரசிகர்கள் மிகவும் விரக்தியடைந்தனர். இந்த படம் ரூ. 200 கோடிக்கு மேல் படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.
இந்த சூழலில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி படத்தை ஏகே ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் நிறைய நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். டீசர் டிரெய்லர் பர்ஸ்ட் சிங்கிள் ஓஜி சம்பவம் செகன்ட் சிங்கிள் காட் பிளஸ் யூ மாமே என பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்று குட் பேட் அக்லி படம் உலகம் முழுவதும் வெளியானது. அஜீத்குமார் நடித்த இந்த படம் 963 திரைகளில் தமிழ்நாட்டில் மட்டுமே வெளியாகி உள்ளது. மிக அதிக எண்ணிக்கையில் முதல் முறையாக அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு கேரளா கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இந்த படம் ரிலீஸானது. தியேட்டர் முன்பகுதிகளில் பெரிய அளவில் கட் அவுட்டுகள் வைத்தும் தோரணங்கள் கட்டியும் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் அஜீத்குமார் ரசிகர்கள், இந்த படத்தை வரவேற்றனர். மேலும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளும் வழங்கினர். தாரை தப்பட்டை அடித்து குத்தாட்டம் போட்டு தங்களது உற்சாகத்தை ஏகே ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.
குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என்று கூறி வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நடிகர் அஜீத்குமாரின் மனைவி நடிகை ஷாலினி, தன் மகளுடன் படம் பார்க்க வந்திருந்தார். ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். அதே போல் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் அர்ஜூஸ் தாஸூம் ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துவிட்டுச் சென்றார்.





