மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், பங்கேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் விஜய்காந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். இதே போல் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் தங்கம் தென்னரசு உதயநிதி உள்ளிட்டோரும் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவரது பூத உடலுக்கு மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கை செய்தனர். பின்னர் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழையில், விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, விஜயகாந்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது. அங்கு நடிகர் விஜய் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் பிற காரணங்களுக்காக ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடல் வைக்கப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
காலை 6 மணியிலிருந்து மதியம் வரை ரசிகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கானோர் அங்கு குவிந்ததால், அந்த இடமே மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்தது. பலரும் கண்ணீர் மல்க விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்டோர் விஜயகாந்த் பூத உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதன் பிறகு தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டிற்கு ஊர்வலமாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வழியெங்கும் கூடியிருந்த பொதுமக்கள் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மக்கள் வெள்ளத்தில் அவரது உடல் கோயம்பேட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தொண்டர்கள் முன்பு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். சுமார் 15 லட்சம் பேர் கேப்டனுக்கு இறுதி மரியாதை செலுத்தி இருப்பதாக அவர் கூறினார். கேப்டனின் கையில் இருக்கும் கட்சி மோதிரம் அவருடனே இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் தேர்தலில் வெற்றி பெறுவதே விஜயகாந்திற்கு நாம் செய்யும் மரியாதை என்றும் அவர் தெரிவித்தார்.





