விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
படத்தில் கமலுக்கு இணையாக பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் போட்டி போட்டு நடித்ததால் காட்சிக்கு காட்சி சுவாரசியம் குறையாமல் இருந்தது விக்ரம். அதுவும், எல் சி யு என்னும் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், தனது முந்தைய திரைப்படமான கைதியை இதில் கொண்டு வந்து அசத்தினார்.
சூர்யா தோன்றிய காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்க, விக்ரம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம் பூண்டது. இதன் பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த கமல்ஹாசன், படத்தில் நடித்த முக்கிய பிரபலங்களுக்கு பரிசுகளை அள்ளி கொடுத்து கவுரவப்படுத்தினார்.
இதன் நடுவே, திரைப்படங்களை தயாரிப்பதிலும் கமல்ஹாசன் ஆர்வம் காட்டி வருகிறார். சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் அவர் தயாரித்து வருகிறார். இதே போல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தையும் கமல் தயாரிக்கிறார்.
மேலும் திரைப்படங்களின் நடிப்பதிலும் உலகநாயகன் தற்போது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஹெச் வினோத்துடன் அவர் இணையப் போகும், ராணுவப் பின்னணியை கொண்டதாக இருக்கும் என்றும், இதில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் உடனும் கமல்ஹாசன் இணைகிறார்.
இதில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் நிலையில், தற்போது டீசரை படம் பிடிக்க மணிரத்னம் திட்டமிட்டு இருக்கிறார். இதனை ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே கன்னத்தில் முத்தமிட்டால் ஆயுத எழுத்து திரைப்படங்களை அவர் ஒளிப்பதிவு செய்து இருந்தார். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.





