நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற ஜூன் 5ம் தேதி தக்லைஃப் படம் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் இந்த படத்தில் கமலுடன் சிலம்பரசன் திரிஷா அபிராமி அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
தக்லைஃப் படத்தின் பிரமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. வருகிற 16ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் கமல்ஹாசன் சிம்பு மணிரத்னம் திரிஷா ஏஆர் ரகுமான் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நிலவிய போர் பதட்டம் காரணமாக இந்த விழாவை படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டார். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், தக்லைஃப் இசை வெளியீட்டு விழாவை மீண்டும் நடத்துவது குறித்து இன்று மாலை கமல்ஹாசன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன்தான் தயாரித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமரன் படம் ஷூட்டிங் நடந்த போது, அந்த பகுதிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்திருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தயாரிப்பாளர் கமல்ஹாசன் உடனடியாக அங்கிருக்கும் படக்குழுவினர் அனைவரும் விமானம் பிடித்து சென்னைக்கு வந்து விடுங்கள். ஷூட்டிங்கை பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு படக்குழு தயாரிப்பு சார்ந்த பொறுப்பாளர்கள், இப்போது விமானம் பிடித்து சென்னைக்கு திரும்பினால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தேவையற்ற செலவுதான் ஆகும். அதனால் இங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் தங்கிக் கொண்டு பிரச்னை சரியானதும் ஷூட்டிங்கை நடத்துகிறோம் என்று கூறியிருக்கின்றனர். அதற்கு கமல், வேண்டவே வேண்டாம். ஒரு கோடி ரூபாய் பணம் முக்கியமல்ல. படக்குழுவில் உள்ள அனைவரது பாதுகாப்புதான் எனக்கு முக்கியம். உடனடியாக தமிழ்நாட்டுக்கு திரும்ப ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கண்டிஷனாக கூறியிருக்கிறார். இந்த தகவலை வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





