தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும், வரவேற்பும் இருக்கிறதோ அதே போல் சில இயக்குனர்களுக்கும் அதே ஆர்வமும், வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஏனெனில் இவர்கள் படைப்பாளிகளாக இருப்பதுதான் அதற்கு காரணம். நடிகர்களை வைத்து இவர் படம் எடுப்பதில்லை. இவர்களது கதையில் நடிகர்கள் நடிப்பவர்களாக இருப்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.
நடிகர்களுக்கான கதையை உருவாக்கி, கமர்ஷியல் என்ற பெயரில் குப்பையான கதைகளை பிரமாண்டமாக காட்டி, ஹீரோயிசத்தை மட்டுமே தூக்கலாக வைத்துதான் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் படங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த படங்களில் ஹீரோ பெரிய கொம்பாதி கொம்பனாக இருப்பார். நினைத்ததை எல்லாம் சாதிப்பார். அவரால் முடியாதது எதுவுமே இல்லை என்ற பில்டப்பு கதைகளை கமர்ஷியலாக்கி தரும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் போன்றவர்கள்.
இயக்குனர்கள் பாலா, அமீர், கரு பழனியப்பன், சுரேந்திரன், மிஷ்கின், வெற்றிமாறன், சமுத்திரக்கனி போன்றவர்கள் அந்த பில்டப்புகளை எல்லாம் நம்பாமல், யதார்த்த சினிமாவை ஓரளவுக்கு ரசிகர்களுக்கு காட்ட முயற்சிப்பவர்கள். எனினும் அவர்களது கதைகளிலும் ஹீரோயிசம் இருந்தாலும் நம்ப முடியாத அளவுக்கு அது இருக்காது. அந்த வகையில் கமர்ஷியல் குப்பை படங்களை இவர்கள் தருவது இல்லை.
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான படம் வணங்கான். துவக்கத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்தார். ஆனால் ஒரு மாதம் வரை ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் இயக்குனர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த படத்தை விட்டு சூர்யா திடீரென விலகி விட்டார்.
அதன்பிறகு சூர்யா கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார்.
இந்த படம் ரிலீஸானால், இப்படி ஒரு மாஸ் படத்தில் நடிக்காமல் மிஸ் பண்ணிவிட்டோமே என நடிகர் சூர்யா பீல் செய்யும் அளவுக்கு வணங்கான் படமும், அருண் விஜய் கேரக்டரும் இருப்பதாக, படம் பார்த்த படக்குழு சார்ந்த சிலர் கூறியிருக்கின்றனர். அந்தளவுக்கு காட்சிக்கு காட்சி, படத்தை செதுக்கி இயக்கியுள்ளார் இயக்குனர் பாலா. அருண் விஜய், இந்த படத்துக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக உயர்த்துவார் என்றும் சொல்லப்படுகிறது.
வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி, வணங்கான் படம் ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போன நிலையில், படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இப்போது குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளை முடிப்பதில் தாமதம் நீடிப்பதால், ஆகஸ்ட் 15ம் தேதி வணங்கான் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





