நடிகர் விஜய் நடித்த 69வது படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். மமிதா பைஜூ பிரியாமணி பிரகாஷ் ராஜ் பாபி தியோல் நரேன் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி, சூர்யா நடித்த கருப்பு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் வசூல் பாதிக்குமோ என்ற கவலையும் நீடிக்கிறது.
இந்த சூழலில் நடிகர் விஜய், சமீபத்தில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்று பேசினார். அதில் திமுக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்த நடிகர் விஜய் ஒரு கட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று அழைத்து கலாய்த்தார். வாட் அங்கிள் திஸ் ஈஸ் ராங்க் அங்கிள் வெரி வொர்ஸ்ட் அங்கிள் என்று பேசி திமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரிமையாளாக உள்ள ரெட்ஜெயின்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்தான் இப்போது தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மைய சக்தியாக இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. எந்த படத்தையும் வினியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் எடுத்துக் கொள்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதும் அவர்களது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
இந்த ஒரு சூழ்நிலையில்தான் திமுக குறித்தும் திமுக ஆட்சி குறித்தும் சினிமா தரப்பில் இருந்து பெரும்பாலும் யாரும் தவறான கருத்துகளை குற்றச்சாட்டுகளை கூற முன்வருவது இல்லை. ஏனெனில் சினிமா துறையை தனது கட்டுப்பாட்டில் திமுக வைத்திருப்பதால் தொழில் பாதிப்பை கருத்தில் கொண்டு அநாவசியமாக யாரும் பிரச்னைகளை உருவாக்குவதும் இல்லை.
அப்படிப்பட்ட ஒரு நிலையில் நடிகர் விஜய், திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கிண்டலாக பேசியிருப்பதால் ஜனநாயகன் படம் ரிலீஸில் பெரிய சிக்கல் ஏற்படும், குறிப்பாக அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதும் சந்தேகம்தான். தியேட்டர் உரிமையாளர்களுக்கு அழுத்தம் தரும் பட்சத்தில் கருப்பு பராசக்தி படங்களுக்குதான் அதிக முன்னுரிமை தருவார்கள். அதிக வசூலை விஜய் படம் தரும் என்றாலும் அதை தவிர்க்க அரசு நெருக்கடி தரும் என தியேட்டர் உரிமையாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். இதனால் ரூ. 1000 கோடி வசூலும் ஜனநாயகனுக்கு கிடைப்பது சந்தேகம்தான் என தகவல் பரவி வருகிறது.





