நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்துக்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை முடித்த பிறகு இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரில் சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட ஆலோசித்து வருகிறார்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் 20 30 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் திரிஷா நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு, 22 கோடி ரூபாய் மேல் வசூலானது.
அதே போல் ரஜினிகாந்த் நடித்த முத்து கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் குணா விஜய் நடித்த போக்கிரி இப்போது ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்து நடிகர் விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு, சச்சின் படத்தை இந்த மாதம் 27ம் தேதி ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த நாளில் பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் துஷாரா விஜயன் நடித்த வீரதீர சூரன் படம் வெளியாக உள்ளது. அதனால் அதிக எண்ணிக்கையில் சச்சின் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது சிக்கல் என்பதால் சச்சின் ரி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நடிகர் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் வருகிற 27ம் தேதி வெளியாகாத பட்சத்தில், அன்று சச்சின் படம் ரி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. வீரதீர சூரன் படம் வெளிவந்து விட்டால் சச்சின் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை. தொடர்ந்து 3 மாதங்களுக்கு நிறைய படங்கள் முக்கிய படங்கள் வெளிவர இருப்பதால் அதன்பிறகுதான் சச்சின் ரி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.





