ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. உண்மையை சொல்லப் போனால் இந்த படம் தோல்வியை சந்தித்தது. ரூ. 13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் வசூல் ரூ. 8 கோடியை தாண்டவில்லை. தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் தனுஷ் பலத்த ஏமாற்றத்தை சந்தித்து விட்டார்.
இப்போது இந்தியில் தேரா இஸ்க் மெயின் என்ற படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இதில் கிருத்தி சனோன் என்பவர் நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே தெலுங்கு நடிகர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த படம் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸாகிறது.
ராயன் நிலவுக்க என் மேல் என்னடி கோபம் படங்களை தொடர்ந்து இயக்குனர் தனுஷ் இயக்கிய படம் இட்லி கடை. இதில் நாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். வில்லனாக அருண் விஜய் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் பாரதிராஜா சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இதற்கான அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் அறிவித்துவிட்டார்.
தனுஷ், நித்யா மேனன் நடிக்க வேண்டிய பாடல் காட்சி ஒன்று வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டியிருப்பதால் அதன்பிறகே படத்தை வெளியிட முடியும். அந்த பாடல் காட்சியை எடுத்து முடித்த பிறகு இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம் என்று தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அதில் கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் இட்லி கடை படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்பதில் இயக்குனர் தனுஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மே மாதம் ரெட்ரோ படம் ரிலீஸாகிறது. ஜூன் 20ம் தேதி தனுஷ் நடித்த குபேரா படம் ரிலீஸாகிறது. ஜூலை மாதம் மதராஸி படம் ரிலீஸாகிறது. ஆகஸ்ட் மாதம் கூலி படம் ரிலீஸாகிறது. இப்படி ஸ்டார் படங்கள் தொடர்ந்து ரிலீஸாகும் நிலையில் இட்லி கடை படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதனால் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி இட்லி கடை படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் இயக்குனர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்ட படம் 5 மாதங்களுக்கு பிறகு ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்குமா, ஆறிப்போன இட்லியை சாப்பிட யாராவது இட்லி கடைக்கு வருவார்களா, என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் படத்தை ரிலீஸ் செய்யவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





