தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை காலங்களில் புதிய படங்களை வெளியிடுவதில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்களில் தொடர்ந்து கிடைக்கும் விடுமுறைகளும், அதனால் தியேட்டர்களுக்கு குடும்பங்களுடன் வரும் ரசிகர்களால் படத்தின் வசூல் அபரிமிதமாக அதிகரிக்கும் என்பதுதான்.
அதே நேரத்தில் பண்டிகை நாட்களில் குடும்பத்துடன், நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்வது என்பது அதுவும் ஒரு விசேஷத்தின் ஒரு பகுதியாக மக்கள் மனதில் மாறி விட்டது. அதனால் பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் சினிமாவுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வருகிற தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி, இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் ரிலீஸாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
டைரக்டர் பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் அருண் விஜய் ரோஷினி பிரகாஷ் மற்றும் பலர் நடித்த படம் வணங்கான் படம் பொங்கல் ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ஆனால் இப்போதைய சூழலில் வணங்கான் படம் பொங்கலுக்கு வெளியாகாது, தள்ளிப் போகும் என்று தெரியவந்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு பின் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அந்தப் படத்தை மிக அதிகமான தியேட்டர்களில் வெளியிட லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. துணிவு படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து அஜித்குமார் படம் வெளியாக உள்ளதால் தியேட்டர் உரிமையாளர்களும் விடாமுயற்சி படத்துக்குதான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் நிறைய வசூலை கொட்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் இயக்குனர் சங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வருகிறது. படத்தின் கதாநாயகன் ராம்சரண் என்றாலும் இது ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் என்பதோடு, இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா போன்ற தமிழ் நடிகர்களுடன் நடித்துள்ளனர். அதனால் இந்த படத்துக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் அதிக ஆதரவு தந்து அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன.
அதனால் வணங்கான் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறைவான தியேட்டர்களில் படம் வெளியிட்டால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாது என்பதால் வேறு ஒரு நாளில் வணங்கான் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வணங்கான் படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் பின்னர் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு என்று ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இப்போது தியேட்டர் பிரச்சனை காரணமாக மீண்டும் வணங்கான் படம் தள்ளிப்போவது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.





