அஜித்குமார் நடிக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்ததோடு சரி, அதன் பின் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான எந்த ஒரு தகவலும் இல்லை. அதுமட்டுமல்லாது அஜித்குமார் சமீப நாட்களாக பல நாடுகளில் பைக்கில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆதலால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கவலையோடு இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம், “அஜித்திற்கும் விஜய்க்கும்தான் போட்டி இருந்தது. ஆனால் தற்போது விஜய்க்கும் ரஜினிக்கும் போட்டி வந்துவிட்டதாகவும் இந்த போட்டியில் இருந்து அஜித் விலகிவிட்டதாகவும் கூறுகின்றனர். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த கே.ராஜன், “ரஜினியை யாருடனும் ஒப்பிடாதீர்கள். விஜய், அஜித்தால் ரஜினியை ஒரு போதும் தொடமுடியாது. விஜய்க்கும் அஜித்துக்கும்தான் போட்டியே. என்றைக்குமே ரஜினிகாந்த் தன் நிலையில் இருந்து கீழே இறங்கவில்லை. ஆதலால் அஜித்-விஜய்யுடன் ரஜினியை ஒப்பிடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “அஜித் மக்களை சந்திக்க மறுக்கிறார். ரசிகர்களை நேரில் பார்க்கமாட்டிக்கிறார். அப்படி இருந்துமே அவரது ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள். அஜித் இப்போது ஒதுங்குவதற்கு அவரேதான் காரணம். விஜய் வருஷத்திற்கு பல படங்கள் கொடுக்கிறார். ஆனால் அஜித் வருஷத்திற்கு ஒரு படம் கொடுப்பதே அதிசயம். விடாமுயற்சி அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் எப்போது படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு தொடங்கினால் இங்குள்ள தயாரிப்பாளராவது பிழைப்பார்கள். ஆயிரம் தொழிலாளர்கள் பிழைப்பார்கள். ஷூட்டிங் இருந்தால்தான் தொழிலாளர்களுக்கு வேலை. நார்வேயில் பைக் ஓட்டிக்கொண்டிருந்தால் யாருக்கு வேலை?” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





