தனது சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருபவர் சிலம்பரசன். இளம்வயதில் இயக்குனராகவும் அறிமுகமாகி, மிகப்பெரிய ஸ்டார் ஆக அவர் உயர்ந்தார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதால், அவரது படத்திற்கு ஓப்பனிங் தற்போதும் சிறப்பாக இருக்கிறது.
எப்போதும் சர்ச்சையில் சிக்கும் சிலம்பரசன், சமீபகாலமாக கதைகளை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றார் போல் நடித்து வருகிறார். இதில் மாநாடு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்று கூறலாம். சொல்லப்போனால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் சிலம்பரசன். இதுவும் அவரது ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றது. தொடர்ந்து நடித்த அவருக்கு பத்து தல திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், தனது 48வது திரைப்படத்திற்காக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியுடன் சிம்பு இணைந்தார்.
இதற்கான ப்ரீ பிரோடுக்ஷன் பணிகளே ஆறு மாதங்களுக்கும் மேல் எடுத்துக் கொண்ட நிலையில், படத்திற்காக நீண்ட முடியை வளர்த்து வந்தார் சிம்பு. வரலாற்றுப் பின்னணியில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தயாரிப்பு பணிகளில் இருந்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் பின்வாங்கியது.
பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடிக்க சிம்புவுக்கு வாய்ப்பு கிடைக்க அதனை பயன்படுத்திக் கொண்டார். கமல்ஹாசன் உடன் அவர் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தற்போது முடிந்திருக்கிறது. இதன் பிறகு சிலம்பரசன் தனது 48வது திரைப்படத்தில் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது.
இப்படியான சூழலில் தான் தனது அடுத்த திரைப்படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் ஹின்ட் கொடுத்திருக்கிறார் சிம்பு. அதில், தனது முந்தைய திரைப்படங்களின் பெயரை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தம் + மன்மதன் + வல்லவன் + விடிவி இன் gen Z mode என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஒருவேளை ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து உடன் இணையும் திரைப்படத்தை தான் அவர் இப்படி கூறி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





