நடிகர் கமல்ஹாசன் 10 ஆண்டுகளுக்கு முன் நடித்த படம் உத்தமவில்லன். இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், டைரக்டர் லிங்குசாமி இந்த படத்தை தயாரித்திருந்தார். கமல்ஹாசன், ஆண்ட்ரியா, ஊர்வசி, நாசர், கேமியோ ரோலில் டைரக்டர் கே பாலசுந்தர் நடித்த உத்தம வில்லன், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படு தோல்வியடைந்தது.
அதனால், இந்த படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. பல கோடி ரூபாய் கடனில் சிக்கியது. இதுகுறித்து கமல்ஹாசனிடம் பேசியபோது, இந்த படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக வேறு ஒரு படத்தில் நடித்து தருவதாக அவர் சம்மதம் தெரிவித்தார். இதற்காக தனது அண்ணன் சந்திரஹாசன் முன்னிலையில், அவர் ஒப்பந்தமும் செய்து கையெழுத்திட்டார்.
ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிக்க தேதி ஒதுக்கித் தரவில்லை. பலமுறை கேட்டும் அதற்கான சரியான ரெஸ்பான்ஸ் கமல் தரப்பில் இல்லை. இந்நிலையில் நேர்காணல்களில் பங்கேற்ற டைரக்டர் லிங்குசாமி, அடிக்கடி இந்த விவகாரம் குறித்து பேசி கமல் மீது குற்றம் சுமத்தினார். பொறுத்து பொறுத்து பார்த்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் கூட்டமைப்பில் புகார் அளித்தார்.
கமல்ஹாசன் என்னை ஏமாற்றி விட்டார். 9 ஆண்டுகள் ஆகியும் ஒப்பந்தம் செய்த வகையில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் அவர் படத்தில் நடிக்க வரவில்லை என்று புகார் அளித்தார். இதையடுத்து கமல்ஹாசன் சமீபத்தில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளார். அப்போது மிக விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக நல்ல முடிவாக தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் இந்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், நடிகர் கமல்ஹாசனை விமர்சிக்க டைரக்டர் லிங்குசாமிக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனென்றால் உத்தம வில்லன் படம் ரிலீஸ் ஆகும் போதே அந்த படத்துக்கு பைனான்ஸ் செய்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான். அப்போதே எல்லாவிதமான ரைட்ஸும் அவர் கைக்கு போய்விட்டது.
அதனால் இந்த விவகாரத்தில் திருப்பதி பிரதர்ஸ் தலையிட எந்த உரிமையும் இல்லை. மேலும் 2015 ஆம் ஆண்டிலேயே கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து தருவதாக கூறினார். ஆனால், அந்த நேரத்தில் தங்களால் படம் தயாரிக்க முடியாது என்று அந்த நிறுவனமே கூறிவிட்டது. அதன் பின்னர் கமல்ஹாசன் பற்றி இப்படி பேசுவது முறையல்ல என்று தயாரிப்பாளர் தேனப்பன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





