கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஞானவேல். அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இதன்பிறகு சிறிய இடைவெளி விட்டுக் கொண்ட அவர், சூர்யாவுடன் கைகோர்த்து ஜெய் பீம் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் மட்டும்தான், காலத்திற்கும் நின்று பேசும். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் அமைந்தது ஜெய் பீம். உண்மை கதையை மையமாக வைத்து அவர் கொடுத்திருந்த அந்த திரைப்படம் மக்களின் மனதை உலுக்கியது. லாக்கப் கஸ்டடி மரணத்தையும், அதன் பின்னால் இருந்த விஷயத்தையும் எப்படி நடந்ததோ அப்படியே காட்டியிருந்தார் ஞானவேல்.
குறிப்பாக அந்த திரைப்படத்தில் ராசா கண்ணுவாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன். லிஜோமல் தாமஸும் ஒரு இருளர் பழங்குடியின பெண்ணாக வாழ்ந்திருந்தார். நீதிமன்ற காட்சிகளும் அதன் உயிரோட்டம் குறையாமல் எடுக்கப்பட, வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நம்மை உறைய வைத்திருந்தார் சூர்யா.
ஜெய் பீம் திரைப்படத்தின் ஒரே ஒரு குறை அது நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாததுதான். இருப்பினும் ஓடிடியில் இருந்து அந்தத் திரைப்படம் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஞானவேல் அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் திரைப்படத்தை இயக்கினார்.
பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் ஊழலை மையமாக இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. என்கவுண்டர் பற்றியும் பேசி இருந்தார்கள். அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் என ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, தோசா கிங் எனும் திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறார் ஞானவேல். சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்க அவர் ஏற்கனவே முடிவு எடுத்திருந்தார். ஆனால் அதற்கான பணிகள் தள்ளிக் கொண்டே போயின. இப்படியான சூழலில் படத்தின் கதை குறித்து, மலையாள மூத்த நடிகர் மோகன் லாலிடம் பேசியிருக்கிறார் ஞானவேல். அவருக்கும் கதை பிடித்து போனதாக சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





