ஒரு படத்தை தயாரிப்பாளர் தயாரிக்கும் போதே அந்த படத்துக்கான மொத்த பட்ஜெட், படம் தயாராகி வெளியானால் லாபம் தரக்கூடிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்து, பிளான் பண்ணி தான் படத்தை தயாரிக்கவே இறங்குகின்றனர். அதிலும் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் தரும் லாபத்தை போலவே சாட்டிலைட் உரிமங்களும், டிஜிட்டல் உரிமங்களும் அந்த படத்துக்கு பெரிய லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு தருகின்றன.
முன்பெல்லாம் நடிகர், இயக்குனர், தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர் போன்ற விஷயங்களை மட்டுமே பார்த்துவிட்டு அந்த படங்களை பல கோடி ரூபாய் கொடுத்து சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் வாங்கிய டிவி சானல் நிறுவனங்கள், ஓடிடி தளங்கள், இப்போது தங்களது நடைமுறையை மாற்றிக்கொண்டு விட்டன.
ஏனென்றால், இப்படி அவர்கள் வாங்கிய பல படங்கள் மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. முன்னணி ஹீரோ்ககள், முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி இயக்குனர்கள் என நம்பி வாங்கிய பல படங்கள், ஓடிடி தளங்களில் பெரிய அளவில் வசூல் தராமல் ஏமாற்றிவிட்டன. அதனால் இப்போது புதிய நடைமுறையை ஓடிடி தளங்கள் கொண்டு வந்துள்ளன.
அதன்படி எந்த ஒரு படமாக இருந்தாலும், அந்த படத்தின் முக்கிய காட்சித் தொகுப்பு வீடியோவை, ஓடிடி தளம் நிறுவனத்துக்கு தந்துவிட வேண்டும். இதை தொழில் முறையில் பிஸினஸ் கட் வீடியோ என்று சொல்கின்றனர். சுமார் 25 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை உள்ள இந்த வீடியோவை பார்த்துதான், இது எந்த மாதிரியான ஜானர், எப்படிப்பட்ட படம் என்பதை ஓடிடி நிறுவனங்கள் பார்த்து, அதற்கேற்ப விலையை நிர்ணயிக்க முடிவு செய்கிறது.
ஓடிடி நிறுவனங்களில் இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு, தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை பிஸினஸ் கட் வீடியோக்களாக உருவாக்கி, ஓடிடி நிறுவனங்களுக்கு தருகின்றனர். அதை பார்த்து படம் பிடித்திருந்தால், குறிப்பிட்ட விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர். இல்லாவிட்டால், அந்த படத்தை நிராகரித்தும் விடுகின்றனர். இதுதான் இப்போது தமிழ் சினிமா ஓடிடி தளங்களின் நிலையாக இருந்து வருகிறது.
ஆனால் இப்படி தரப்படும் பிஸினஸ் கட் வீடியோக்களை, ஓடிடி தளம் சார்ந்த சிலர் தனக்கு நெருக்கமானவர்கள், நண்பர்களுக்கு அனுப்பி இதை பார்த்து கருத்து சொல்லுமாறு கேட்கின்றனர். அப்போது அதை மற்றவர்களுக்கும் அனுப்பும் நிலை ஏற்படுகிறது. அதனால் ஒரு படம் குறித்த முழு தகவல்களும் மற்றவர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதனால் படத்தின் அனைத்து தகவல்களும் ஷேர் ஆவதால், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். படம் குறித்த தகவல்ளை, ஓடிடி நிறுவனங்கள் ரகசியாக காக்க தவறி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை தயாரிப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.





