கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால், திருமணம் என்றால் அதிகபட்ச செலவாக அடித்தட்டு குடும்பங்களில் 10 ஆயிரம் முதல் நடுத்தர குடும்பங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரைதான் செலவாக இருக்கும். பெரிய கோடீஸ்வரர் வீட்டு திருமணம் என்றால் ரூ. 10 லட்சம் வரை அதிகமாக இருக்கும். அவரவர் தகுதிக்கேற்ப திருமண செலவுகள் இருக்கும்.
ஆனால் இப்போதெல்லாம் திருமண பத்திரிகைகளை அச்சடிக்கும் செலவே, பல லட்சங்களை கடந்து விடுகிறது. சமீபத்தில் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண பத்திரிகை ஒன்றின் மதிப்பு ரூ. 5 ஆயிரம் வரை இருப்பதாக கூறப்பட்டது.
இப்படி திருமண பத்திரிகை அச்சடித்த செலவில், 40, 50 ஆண்டுகளுக்கு முன் கோலாகலமாக திருமணத்தையே நடத்தி முடித்திருக்கின்றனர் என்றால் நம்பியே ஆக வேண்டும். இதுதான் தமிழ் சினிமாவில் நிலையும் இருக்கிறது. நடிகர், நடிகைகளுக்கு இன்று தரும் சம்பளத்தை வைத்து, ஒரு படத்தையே தயாரித்து விட முடியும் என்ற உண்மைதான் அது.
சமீபமாக நடிகை நயன்தாரா நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அவர் கடைசியாக நடித்த அன்னபூரணி படமும் வெற்றி பெறவில்லை. ஆனால் அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அள்ளித் தருகின்றனர்.
ஆனால் அந்த சம்பளம் வாங்கிக்கொண்டு அவர் சென்னையில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள்தான் ஷூட்டிங் நடத்த வேண்டும், காலை 11 மணிக்கு வந்து, மாலை 5 மணி வரை நடிப்பேன், அதுவும் கண்ணீர் விட்டு அழும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், கிளிசரின் கண்ணில் விட்டால், முக அழகு கெடுகிறது என்று இதுபோன்ற ஏகப்பட்ட நிபந்தனைகளை போடுகிறார்.
புதுமுக நடிகை, வளரும் நடிகை நடித்தால் படம் வியாபாரம் ஆகாது; நயன்தாரா நடித்தால் படம் வியாபாரமாகும் என்று தயாரிப்பாளர் யோசிப்பது, தொழில் ரீதியாக சரியாக இருந்தாலும், இப்படியே நடிகர், நடிகைகளை நம்பால் புதுமுக இயக்குனர்கள், புதுமுக நடிகைகளுக்கு ரிஸ்க் எடுத்த வாய்ப்பு கொடுத்தால் நிறைய நல்ல படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும். முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொட்டிக் கொடுக்கும் சம்பளத்தில் நல்ல படங்களை தயாரிக்கலாம் என்பது சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





